புதிய விதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்! அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

புதிய விதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்! அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம்

ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுக்குழு கூடி அதிமுகவின் நியமனப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றிணைந்த பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், "நியமன பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என்றும், இனி அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது" என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச்செயலாளர் பதவிக்குப் பதிலாக அதற்கு இணையான அதிகாரங்கள் கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

கட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய விதிகளும், அமைப்பு ரீதியாக கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் ஒப்புதல் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் புதிய விதிகளுக்கு தற்போது தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை கூட்டும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

தற்போது நடைபெற்றுவரும் அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் முடிந்த பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவர் என்று கூறப்படுகிறது.

இந்த ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் தரப்பிலிருந்து விரைவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here