வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் அமைக்கப்பட்ட இலவச பசுமை கழிவறையை கலெக்டர் ராமன் திறந்து வைத்து பார்வையிட்டார். தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை கழிவறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாநிலத்திலேயே முதல் முறையாக வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பசுமை கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. தலைமையாசிரியர் வீரமணி தலைமை தாங்கினார்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய விஞ்ஞானி டில்லிபாபு, தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் குமார், இயந்திரவியல் துறை தலைவர் முரளிதர் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் எல்லையில்லா பொறியியல் அமைப்பின் விஞ்ஞானிகள் ஆகியோர் இணைந்து உயிரி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பசுமைக் கழிவறையை அமைத்துள்ளனர்.
இதன் மூலம் மனித கழிவுகள் முற்றிலும் நீராகவும், மீத்தேன் மற்றும் கரியமில வாயுவாகவும் மாற்றப்படும்.
இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் தெளிவாகவும், துர்நாற்றமின்றியும் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதேபோல் இந்த தண்ணீரை செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.
கால்வாய் வசதியில்லாத பகுதிகளுக்கு இக்கழிவறை பயனுள்ளதாக இருக்கும்.
இக்கழிவறையை அமைக்க குறைந்த செலவாகும் என்பதால் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர் அமைப்பு ஆலோசகர் பிரவீன்ராஜ் நன்றி கூறினார். இதில் வேலூர் தாசில்தார் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக