விமானம் வழியாகக் காய்கனி விநியோகம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

விமானம் வழியாகக் காய்கனி விநியோகம்!

இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளிலுள்ள சந்தைகளை இணைக்கும் வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை விமானங்கள் வாயிலாக மானியக் கட்டணத்தில் கொண்டுசெல்லும் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்துகிறது.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் வட கிழக்குப் பிராந்தியங்களுக்கு சரக்கு விமானங்கள் வாயிலாக மானியக் கட்டணத்தில் காய்கறி மற்றும் பழங்களை எடுத்தும் செல்லும் திட்டம் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆறு மாதங்களுக்கு மானியக் கட்டணத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இம்மாத இறுதிக்குள் முதற்கட்டமாக 20 டன் அளவிலான மாதுளம் பழங்களும் தக்காளிப் பழங்களும் நாசிக் மாவட்டத்திலிருந்து மிசோரம் மாநிலத்தின் ஐசால் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாகச் சரக்கு விமானக் கட்டணங்களுக்கு மானியம் வழங்குவது இதுவே முதன்முறையாகும்.

இங்கிருந்து காய்கறி மற்றும் பழங்களை எடுத்துச் செல்லும் சரக்கு விமானமானது, அங்கிருந்து திரும்பி வருகையில் மிசோரம் மாநிலத்தில் விளைந்த இஞ்சி, டிராகன் ஃபுரூட் ஆகிய பழங்களை மகாராஷ்டிர மாநிலத்துக்குக் கொண்டுவரும். சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.64 வரை மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 5,000 கூட்டுறவு வேளாண் அமைப்புகள் பயன்பெறும் என்பதோடு, வேளாண் பொருட்கள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சரக்குகளை சாலை வழியாகவோ, ரயில் பாதை வழியாகவோ எடுத்துச் சென்றால் கிலோவுக்கு 11 ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால், விமானங்கள் வழியாக எடுத்துச் செல்லும்போது ரூ.75 வரையில் செலவாகிறது. ஆனால், இதுபோன்ற மேம்பாட்டுத் திட்டத்துக்கு அரசிடமிருந்து உரிய மானிய உதவி வழங்கப்படும்” என்று மகாராஷ்டிர மாநில அரசு அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here