ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தனர். அதன்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான 21 மாத கால நிலுவைத் தொகையை உடனே அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 7ஆவது ஊதியக் குழு அறிவித்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர். ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதற்கு அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால் இதுவரை அந்தப் பரிந்துரையை அரசு வெளியிடவில்லை.
கடந்த மே மாதம் 8ஆம் தேதி சென்னையில் நடந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் மறியல் போராட்டத்தின்போது, ஒரு நபர் கமிட்டியில்தான் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று நடைபெறும் போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சுமார் 500 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக