வெளிநாடுகளிலிருந்து பணம் குவியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து அதிகப்படியான பணத்தை பெற்ற நாடாக இந்தியா உள்ளது. 2016ஆம் ஆண்டில் பெறப்பட்ட நிதியை விட 2017ஆம் ஆண்டில் 10 விழுக்காடு கூடுதல் நிதியை இந்தியா பெற்றுள்ளது.
பொதுவாக, இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் பெரும்பங்கு வளைகுடா நாடுகளிலிருந்து வரும். 2017ஆம் ஆண்டிலும் வளைகுடா நாடுகளிலிருந்து பெரும்பங்கிலான பணம் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு அதிகப்படியான பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் சவுதி அரேபியாவும், நான்காவது இடத்தில் குவைத்தும், ஐந்தாவது இடத்தில் கத்தாரும், ஆறாவது இடத்தில் இங்கிலாந்தும், ஏழாவது இடத்தில் ஓமனும், எட்டாவது இடத்தில் நேபாளமும், ஒன்பதாவது இடத்தில் கனடாவும், பத்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், பதினொன்றாம் இடத்தில் பக்ரைனும் உள்ளன.
ஐந்து முக்கிய அரபு நாடுகளில் அண்மையில் பணியமர்த்துதல் திட்டங்களும், சட்டங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால், இந்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு எதிர்காலத்தில் அனுப்பப்படும் பணத்தில் தாக்கம் ஏற்படலாம் என்று ஜே.எம்.ஃபினான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், காத்தார், ஓமன் ஆகியன இந்த ஐந்து நாடுகள் ஆகும். இந்தச் சட்டங்களின் வாயிலாக, அந்நாடுகளுக்குத் தேவையான தொழிலாளர் சக்தியில் அந்நாட்டவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதனால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவதோடு, அதன் விளைவாக இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவும் குறையும் வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக