முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவ பரிசோதனைக்காக இன்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அறிவுரைப்படி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (ஜூன் 11) டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனை என்றும், சோதனை முடிந்த பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாஜ்பாய்க்கு நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனருமான ரன்தீப் குலேரியா மேற்பார்வையில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குலேரியா கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வாஜ்பாய்க்குத் தனிப்பட்ட மருத்துவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய், கடந்த 1924ஆம் ஆண்டு பிறந்தார். 1942ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்த வாஜ்பாய், இரண்டு முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார். ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
93 வயதாகும் வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலிலிருந்து விலகி டெல்லி கிருஷ்ணா மார்க் இல்லத்தில் ஓய்வெடுத்துவருகிறார். வாஜ்பாய்க்கு, 2015ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரால் நேரில் பெற முடியாத நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாஜ்பாயின் இல்லத்துக்கே நேரில் சென்று விருதை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக