!
கார்பரேட் கடன்கள் தள்ளுபடி சாத்தியமாகும்போது விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது ஏன் சாத்தியமாகாது, என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளுக்குக் கடன் தள்ளுபடி அவர்களைக் காக்கும் ஒரு தீர்வாகவே இருக்கும் என்று பிசினஸ் லைன் ஊடகத்துக்கு ராஜீவ் குமார் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இப்போதைய மோடி அரசின் ஆட்சியில் வேளாண் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் சில மாநில அரசுகள் கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இது சரியா என்று கேட்டதற்குப் பதிலளித்த அவர், ”வேறு வழி இல்லை. கார்பரேட் கடன்கள் ரூ.10,000 கோடிவரை தள்ளுபடி செய்யப்படும்போது விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யக்கூடாதா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
2017-18ஆம் ஆண்டில் வேளாண் துறை 3.4 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் 2016-17ஆம் ஆண்டில் இத்துறை 6.3 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டிருந்தது. சாகுபடிச் செலவுகள் உயர்ந்ததும், உற்பத்திக்கான விலை சரிந்ததுமே விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணமாகும் என்று பொருளாதார நிபுணர்கள் பலர் கூறியுள்ளனர். இதற்கேற்றவாறு உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் வேளாண் கடனைத் தள்ளுபடி செய்தன.
இதுகுறித்து ராஜீவ் குமார் மேலும் கூறுகையில், "உற்பத்திச் செலவு அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகளுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வேளாண் நிலங்களின் தரமும் குறைந்து வருகிறது. சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கும் மின்னணு வேளாண் சந்தைகளும் குறைவாகத்தான் உள்ளன. இருப்பினும் இவற்றை அதிகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் விவசாயிகளின் வருவாய் குறைந்துள்ளது. மேலும், இதற்கான தெளிவான இலக்கை நிர்ணயித்து அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக