இந்தியாவில் சோலார் மின் உற்பத்திக் கருவிகள் பொருத்தப்படுவது நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது.
2017ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டை விட, 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சோலார் கருவிகள் பொருத்தப்படுவது 34 விழுக்காடு அதிகரித்து, உற்பத்தித் திறனில் 3,269 மெகா வாட் உயர்ந்துள்ளது. இதுகுறித்து மெர்காம் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் சோலார் கருவிகள் பொருத்தப்பட்டதில் 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டு சிறப்பானதாக இருந்தது. இக்காலாண்டில் சோலார் உற்பத்தித் திறன் 34 விழுக்காடு அதிகரித்து, 3,269 மெகா வாட் கூடுதலாகியுள்ளது. 2017ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 2,448 மெகா வாட் உற்பத்தித் திறனுக்கான சோலார் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டன. 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2,991 மெகா வாட் உற்பத்தித் திறனுக்கான சோலார் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்காம் கேப்பிட்டல் குரூப் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும், துணை நிறுவனருமான ராஜ் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் காலாண்டில் சாதனைப் படைக்கப்பட்டிருந்தாலும் கூட, கடந்த சில காலாண்டுகளாக சோலார் மின்சக்திக் கொள்முதல் செயல்பாடுகள் நடைபெறவில்லை. சோலார் தகடுகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கட்டணங்கள் குறையும் என்றும், கொள்முதல் செயல்பாடுகளை விநியோக நிறுவனங்கள் துரிதப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
2018 ஆண்டின் முதல் காலாண்டு வரையில் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சோலார் திட்டங்களின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் 22.8 கிகா வாட் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக