அமெரிக்க அரசு, ஆறு AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அரசு 930 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் (இந்திய மதிப்பில் சுமார் 6,286 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம்) ஆறு AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் விற்பனை செய்ய உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இன்று (ஜூன் 13) தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம், அமெரிக்க காங்கிரஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காததால், தற்போது இந்த ஒப்பந்தம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
போயிங் மற்றும் இந்திய பங்குதாரரான டாட்டா ஆகிய இரு நிறுவனங்களும் அப்பாச்சே ஹெலிகாப்டர்களின் உடற்பாகங்களை தயாரிக்கும் ஆலை ஒன்றை இந்தியாவில் அமைத்துள்ளன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவிலிருந்து இதற்கான நேரடி விற்பனைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டரானது, இருளிலும் பார்க்க உதவுகின்ற சென்சார்கள், ஜிபிஎஸ் உதவி, வானிலிருந்து தாக்கும் ஏவுகணைகள், எதிர்ப்புக் கவசங்கள் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு கூட்டுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நவீன போர் கருவியானது, இந்திய ராணுவப்படைக்கு மேலும் வலுசேர்க்கும். தரைவழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்த AH-64E ரக ஹெலிகாப்ட்டர் இந்தியாவின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும்.
எனவே இதுபோன்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் அதன் துணை ஆயுதங்களை ஆயுதப் படைகளில் சேர்ப்பது இந்தியாவுக்கு கடினமாக இருக்காது. புதிய உபகரணங்களின் வரவானது அடிப்படை ராணுவப்படைக்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது" இவ்வாறு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக