CPS நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஜூன் 13) 3ஆவது நாளாக நீடிக்கிறது.
15 அம்சக் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டங்களை நடத்திவரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 50 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், நேற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நேற்று பலர் சோர்வடைந்தனர். நேற்று இரவு ஒருங்கிணைப்பாளர்கள் டெய்சி, மோசஸ், நந்தகுமார் ஆகியோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எழிலகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் நீடிக்கிறது. காலை முதல் பலர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மூத்த நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், மாயவன், முத்துசாமி, அன்பரசு ஆகியோர் மிகவும் தளர்ச்சியான நிலையில் மற்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள், “உண்ணாவிரதம் இருந்துவரும் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அரசு மறுப்பதுடன், எங்களைக் கண்டுகொள்ளாமலே இருப்பது வேதனை அளிக்கிறது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக