அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் மற்றும் வாதுமைக் கொட்டை (வால்நட்) ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. இது அமெரிக்காவுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜூன் 20ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாசிங்டன் ஆப்பிளுக்கு 75 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளது. பொதுவாக வாசிங்டனிலிருந்து ரெட் டெலிசியஸ் ரக ஆப்பிள்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும். அதேபோல அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாமுக்கு கிலோ ஒன்றுக்கு 42 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், மற்ற நாடுகளுக்கு 35 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் வரி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வால்நட் இறக்குமதிக்கு தற்போது 120 விழுக்காடு சுங்கக் கட்டணம் விதிக்கப்படுகிறது. மற்ற நாடுகளுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. இதனால் வாசிங்டன் ரெட் டெலிசியஸ் ஆப்பிள் விலை 25 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று விநியோகர் ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். 160 மில்லியன் டாலர் மதிப்பிலான 1,60,000 டன் ஆப்பிள்களை ஆண்டொன்றுக்கு இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது. உலகளவில் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக அதிக ஆப்பிள்களை இந்தியா அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்கிறது.
இதுகுறித்து ஐஜி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் தருண் அரோரா பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்த வரி உயர்வால் இறக்குமதி 60 முதல் 70 விழுக்காடு வரை பாதிக்கப்படலாம். நிச்சயமாக இந்த நடவடிக்கையால் ஆப்பிள் விலை உயர்வைக் கண்டு வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக