கிரீஸ், சூரினாம் நாடுகளைத் தொடர்ந்து கியூபா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
கிரீஸ், சூரினாம், கியூபா ஆகிய மூன்று நாடுகளில் எட்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, கடந்த சனிக்கிழமையன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா, மத்திய இணையமைச்சர் விஷ்ணு தியோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஷ் காஷ்யப், நித்யானந்த ராய் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் அவருடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். கிரீஸ், சூரினாம் நாடுகளுக்குச் சென்ற ராம்நாத் கோவிந்த், நேற்று (ஜூன் 21) கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில், அவருக்கு கியூப அரசின் சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சாண்டியாகோ டி கியூபாவில் உள்ள அந்நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார் ராம்நாத் கோவிந்த். வளர்ந்த நாடுகளின் காலனி ஆதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்து வந்த காஸ்ட்ரோ, 2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது சமாதிக்குச் சென்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் குடியரசுத் தலைவர். “இந்தியாவின் சிறந்த நண்பராக விளங்கிய காஸ்ட்ரோ, சர்வதேச அளவில் வளரும் நாடுகளின் குரலுக்கு வலு சேர்த்தவர். அவரது தலைமைத்துவமானது பல கோடி மக்களுக்கு ஊக்கமளித்துள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாள் பயணத்தில், கியூபாவின் புதிய அதிபரான மிக்கேல் தியா கேனல் பெர்முடேஸுடன் ராம்நாத் கோவிந்த் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக