பாஜகவை எதிர்க்கும்பொருட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித்தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி. இந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, அவர் சாமர்த்தியமாகப் பதிலளித்துள்ளார்.
கடந்த மே 8ஆம் தேதியன்று, கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் பதவியேற்க தான் தயாராக இருப்பதாக அறிவித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நான் பிரதமராவேன் என்று உறுதிபடத் தெரிவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றியபோது, முதன்முதலாக அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சியானது பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த மார்ச் 13ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்த விருந்தில் சரத் பவார், சரத் யாதவ், ஜிதன்ராம் மஞ்சி, டி.ராஜா, கனிமொழி, தேஜஸ்வி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் (ஜூன் 13) காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த இப்தார் விருந்திலும் எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி பிர்ஸா முண்டா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் லாலு. இதனால், பிகார் மாநில முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வி, ஆர்ஜேடி கட்சி நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டுமென்று உணர்ந்ததில் தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார் தேஜஸ்வி. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காக்கும் நோக்கில், தான் ராகுலுடன் இணைந்திருப்பதாகக் கூறியவர், பிரதமர் வேட்பாளராக ராகுல் முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு மிக சாமர்த்தியமாகப் பதிலளித்துள்ளார்.
“காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால், தான் பிரதமர் ஆவேன் என்று தெரிவித்தார் ராகுல் காந்தி. எந்த கட்சி அதிக இடங்களைப் பெறுகிறதோ, அந்தக் கட்சியே பிரதமர் பதவியைப் பெறும் என்றே நினைக்கிறேன். எதிர்க்கட்சிகளை உற்றுநோக்கினால், அதற்கான தகுதிகளோடு பலர் இருப்பது தெரியவரும்” என்று கூறியுள்ளார் தேஜஸ்வி. ராகுலின் தலைமையை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்விக்கும், அவர் இதையே பதிலாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் டெல்லியில் ராகுலைச் சந்தித்துப் பேசிய நிலையில், தேஜஸ்வி இவ்வாறு பதிலளித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆர்ஜேடி கட்சியில் லாலுவின் கருத்தை அறிய முடியாத நிலையில், அவரது வழிகாட்டுதலோடு அக்கட்சியை நிர்வகித்துவரும் தேஜஸ்வியின் கருத்தானது லாலுவின் கருத்தைப் பிரதிபலிப்பதாகவே கருதப்படும். அந்த வகையில், ராகுல் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கான எதிர்க்கட்சிகளின் கருத்தை மேலும் வெளிக்கொணரும் வகையில் தேஜஸ்வியின் பதில் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக