தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தாய்ப்பால் கிடைக்காத பச்சிளம் குழந்தைகளைக் காப்பதற்காக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி இன்று (ஜூன் 23) தொடங்கப்பட்டது. மூன்றரை கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள மார்பக ஊடுகதிர் படக்கருவி, தாய்ப்பால் வங்கி, டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம், ஆதரவு சிகிச்சை மையம் ஆகியவற்றைத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாய்ப்பால் வங்கியும், 20 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் மார்பக ஊடுகதிர் படக்கருவியும் பதினாறரை லட்ச ரூபாய் செலவில் நோய் தணிப்பு ஆதரவுச் சிகிச்சை மையமும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி அல்லாத அரசு மருத்துவமனைகளில், நாமக்கல் அரசு மருத்துவமனையில்தான் முதன்முதலாகத் தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.
இதையடுத்து, திருச்சி காவிரி மருத்துவமனையில், புற்றுநோயைக் கண்டறிவதற்கான லாத் கேப் எனப்படும் அதி நவீன சிகிச்சை மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்துப் பேசினார். அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் வரைவு அறிக்கை கிடைத்தவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விடும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக