"அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்" என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (ஜூன் 12) கோரிக்கை விடுத்தார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான 21 மாத கால நிலுவைத் தொகையை உடனே அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலக வளாகத்தில் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.
உண்ணாவிரதம் இருந்துவரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இன்று காலை (ஜூன் 12) சந்தித்த ஸ்டாலின், திமுகவின் ஆதரவைத் தெரிவித்தார். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவோம்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் குறித்து திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "ஜாக்டோ-ஜியோவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், "சம்பள உயர்வு வழங்கும் குழுவின் பரிந்துரைகளை மிகக் குறுகிய காலத்தில் பெற்று 1-10-2017 அன்று முதல் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்தி தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த சம்பள உயர்வினால் தமிழக அரசுக்கு ஒரே ஆண்டில் 14,719 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டாலும், அரசு ஊழியர்களின் நலன் கருதி அமல்படுத்தப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டிலுள்ள மொத்த அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர்கள் 7.42 லட்சம் பேர். மொத்தமாக உள்ள இந்த 19.42 லட்சம் குடும்பங்களுக்கு, அரசின் வரி வருவாயில் செலவிடப்படும் தொகை 70%. தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்களுக்கும் சேர்த்து மாநில அரசின் வரி வருவாயில் மக்கள் நலத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடப்படும் தொகை 6% மட்டுமே" என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம், "சிறப்பான அரசு நிர்வாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கடமை. மாநில அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, கோரிக்கைகளை முன் நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது" என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், "தற்போது ஜாக்டோ -ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் 108 பேர் எழிலகம் வளாகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்குத் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றும் கூறினார்.
பன்னீர்செல்வம் பேச்சினிடையே குறுக்கிட்ட ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் நாங்கள் ஏன் அவர்களைத் தூண்டி விட வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து உண்ணாவிரதம் இருந்துவரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக