மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உள்ள காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்களை ஆண் காவலர்கள் முன்னிலையில் தாய்மை பேறு பரிசோதனை செய்ய வற்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த புதன்கிழமை(ஜூன் 13) மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது பெண்கள் சிலர் போலீஸ் கான்ஸ்டபிள் நியமனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உயரத் தகுதியை தளர்த்துமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்களை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 151கீழ் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூன் 14) விடுவித்துள்ளனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கப் பெண்களுக்கு குறைந்த பட்சம் 158 செ.மீ உயரம் இருக்க வேண்டும். ஆனால் இந்த உயரத் தகுதியில் 3 செ.மீ குறைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் தங்களை ஆண் காவலர்கள் முன்னிலையில் தாய்மை பேறு அடைந்துள்ளதற்கான பரிசோதனை செய்ய நிர்ப்பந்தித்ததாக கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிகளுடன் நாங்கள் அமர வைக்கப்பட்டோம் என்று வருத்தமும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆண்களுக்கு முன்னால் சோதனை செய்ததாகக் கூறப்படும் புகாரை போபால் மத்திய சிறை கண்காணிப்பாளர் தினேஷ் நர்க்வே மறுத்துள்ளார். அந்தப் பெண்களிடம் கையெழுத்திட்டு அனுமதி பெற்ற பிறகே அவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது என்று தினேஷ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக