இந்தியாவின் சுற்றுலாத் துறையைப் பிரபலப்படுத்தவும், இந்தியாவுக்கான அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கிலும் அமெரிக்காவில் ஐந்து நாள் சாலைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க், சிகாகோ, ஹவுஸ்டன் உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் இந்தியா சார்பாக சுற்றுலா சாலைக் கண்காட்சிகள் இம்மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘இன்கிரேடிபிள் இந்தியா ரோடு ஷோ’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியில் இந்தியாவின் சுற்றுலாத் துணை இணையமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் இத்துறை சார்ந்த உறுப்பினர்கள் பலர் பங்கேற்று நடத்துகின்றனர். கருத்துப் பரிமாற்றம், விளக்கக் காட்சிகள் மற்றும் சிறு மாநாடுகள் இக்கண்காட்சியில் இடம்பெறும்.
இந்தக் கண்காட்சியில் தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான கலந்துரையாடல்கள், காட்சிகள், ஊடக விளக்கங்களை இந்தியப் பிரதிநிதிக் குழு அளிக்கவுள்ளது. இந்தியா நிச்சயமாகப் பார்க்கப்படவேண்டிய சுற்றுலாத் தலம் என்பதை உணர்த்தவே இந்தக் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் மூன்று முன்னணி நாட்டவர்களில் அமெரிக்கர்களும் உள்ளனர். 2018 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 11.21 விழுக்காட்டுடன் அமெரிக்கர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக