தேனா வங்கிக்கு தடை ஏன்? எனமார்க்சிஸ்ட் எம்.பி. கேள்வி? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தேனா வங்கிக்கு தடை ஏன்? எனமார்க்சிஸ்ட் எம்.பி. கேள்வி?

ஒரு வங்கியினுடைய சொத்து மிகவும் பலவீனமடைந்து, அது மற்றொரு வளமான வங்கியுடன் இணைக்கப்படும் நிலையிலோ அல்லது அந்த வங்கி மூடப்படும் நிலையிலோதான் ரிசர்வ் வங்கி அதன் சட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஷரத்தின் அடிப்படையில் கடன் கொடுப்பதையோ அல்லது சேமிப்பு பெறுவதையோ தடை செய்யமுடியும். ஆனால், தேனா வங்கியில் கடன் கொடுப்பதை ரிசர்வ் வங்கி மிக சமீபத்தில் தடை செய்துள்ளது. இதனால் தேனா வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி மத்திய நிதி அமைச்சருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் கடிதம் எழுதியிருக்கிறார்.

“கடன் கொடுக்கும் வியாபார நடவடிக்கைதான் ஒரு வங்கியின் உயிர்நாடி என்பதும், அதன்மூலமாக கிடைக்கக்கூடிய வட்டி வருவாய்தான் ஒரு வங்கி லாபத்தின் பிரதான பங்கு என்பதும் நீங்கள் அறிந்ததே. அத்தகைய உயிர்நாடியான வியாபாரத்தை ரிசர்வ் வங்கி தடை செய்து விட்டால் ஒரு வங்கி எப்படி பிழைக்க முடியும்? உண்மையில் இத்தகைய நடவடிக்கை அந்த வங்கியின் லாபத் திறனை பலவீனமாக்கி அந்த வங்கியை இழுத்து மூடுவதில்தான் கொண்டு செல்லும்.

ரிசர்வ் வங்கி எந்த அடிப்படையில் ஒரு பொதுத்துறை வங்கியின் மீது இத்தகைய நடவடிக்கையை எடுத்தது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது’’ என்று நேற்று (ஜூன் 15) மத்திய நிதி அமைச்சருக்கு எழுதியுள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார் டி.கே. ரங்கராஜன்,

இது சம்பந்தமாக தேனா வங்கியில் 2017 ஜூலை 24 அன்று நிதி அமைச்சக அலுவலக பிரதிநிதிகள், தேனா வங்கி நிர்வாகம் மற்றும் அதன் தொழிற் சங்கங்களிடையே ஒரு மறுசீரமைப்பு திட்டம் கையெழுத்தாகியுள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டம் நிதி அமைச்சகத்தின் அறிவுரைப்படிதான் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் வியாபாரம் மற்றும் லாப வளர்ச்சியை தொடர்ச்சியாக கொண்டு செல்வது, வங்கித் துறையின் பொதுவான அளவிற்கு தேனா வங்கியின் செயல்பாட்டு குறியீடுகளை உயர்த்துவது, வராக் கடன் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்கிலிருந்து கூடுதலாக வசூல் செய்வது, சராசரி நிகர வட்டி இடைவெளியை தொடர்ந்து உயர்த்துவதன் மூலமாக லாபத்தை உயர்த்துவது, இதர வருமானத்தை உயர்த்துவது ஆகியவற்றை அடைவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள டி.கே.ரங்கராஜன்,

”அரசாங்கத்தின் ஆலோசனைப்படி அமல்படுத்தப்படும் இந்த மறுசீரமைப்புத் திட்டம் தொடக்க நிலையில் உள்ளபோது, ரிசர்வ் வங்கியின் கடன் வழங்கலை தடை செய்யும் இந்த உத்தரவு மத்திய அரசின் இந்த மறுசீரமைப்பு திட்டத்தை சீர்குலைத்து விடும்’’ என்று தெரிவித்துள்ளார் டி.கே.ரங்கராஜன்.

தேனா வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் பதவி கடந்த 6 மாத காலத்திற்கும் மேலாக காலியாக உள்ளதை தன் கடிதத்தில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கும் டி.கே.ரங்கராஜன், “மேற்கூறப்பட்ட மறுசீரமைப்புத் திட்டத்தின்படி வங்கியின் உயர்மட்ட நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு மாதாந்திர மற்றும் காலாண்டு பரிசீலனைக்காக அமைக்கப்பட வேண்டும். வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இல்லாத சூழ்நிலையில் இத்தகைய பரிசீலனைக் கூட்டங்கள் நடைபெற்றனவா, அவ்வாறு நடைபெற்றிருந்தால் அதனுடைய அறிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சேர்ப்பிக்கப்பட்டனவா என்பது தெளிவாக இல்லை’’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு தேனா வங்கியில் கடன் கொடுப்பதை தடை செய்யும் ரிசர்வ் வங்கியின் ஆணையை நீக்க வேண்டும் என்றும், மேலும், தேனா வங்கிக்கு தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரை கூடிய வரைவில் நியமிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் டி.கே.ரங்கராஜன்.

இதெல்லாம் சரிதான். ஆனால் மிக முக்கியமான இந்த தேனா வங்கி பற்றிய பிரச்னையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி என்று குறிப்பிட்டு அவருக்கே எழுதியுள்ளார் டி.கே.ரங்கராஜன். ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த மே 14 ஆம் தேதி முதல் இலாகா இல்லாத அமைச்சராக ஓய்வெடுத்து வருகிறார் அருண் ஜேட்லி. அவருக்கு பதிலாக இப்போது நிதித் துறை அமைச்சராக இருப்பவர் பியூஷ் கோயல்.

இதை நாம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கூறியுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here