கல்வி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அவற்றை நிர்வாகத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மாநிலத் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த முகமது அலி சித்திக் என்பவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் உரிய பாதுகாப்பு தரப்படுகிறதா?, பள்ளிகளில் மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்கிறாரா? உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு பதில் தருமாறு திருவண்ணாமலை மாவட்ட ெமட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான ஆய்வாளரிடம் மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விளக்கம் தருமாறு உத்தரவிட்டார். அதன்படி, ஆய்வாளர் பதில் தந்தார்.
இதையடுத்து, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் அளித்த உத்தரவு வருமாறு: கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகள் அரசிடமிருந்து நிதி பெறுகின்றன.
வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ள பல கல்வி அறக்கட்டளைகள் மாநில அரசு அல்லது மாநகராட்சிகளில் மானியங்களை பெறுகின்றன.
பள்ளிகளின் வாகனங்கள் அனுமதியை புதுப்பிப்பதற்கும் போதிய அவகாசமும், நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
எனவே, இதுபோன்ற வசதிகளையும், நிதியையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெறும் அனைத்து பள்ளிகளும் தங்களின் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தர வேண்டியது கட்டாயம்.
தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சில கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுள்ளன.
எனவே, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளுக்கும் பாதுகாப்பு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் கல்வி கற்கும் கல்வி மையங்களில் உள்ள பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு உரிமை உள்ளது.
இந்நிலையில், அனைத்து பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் அந்தந்த நிர்வாகத்தில் உள்ள ஆசிரியர்கள், முதல்வர், தாளாளர், பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள் ஆகியோர் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அவற்றை தங்கள் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
இந்த உத்தரவை அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்ப வேண்டும்.
மாநில குற்ற ஆவண காப்பக இயக்குநர் தங்களிடம் இதுதொடர்பான விவரங்கள் இருந்தால் அவற்றை தலைமை கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்
.இந்த உத்தரவை அமல்படுத்தி வரும் ஜூலை 16ம் தேதி மாநில தகவல் ஆணையத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரக மக்கள் தொடர்பு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக