நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் சோலார் மின்னுற்பத்தி இலக்கான 3,000 மெகா வாட் என்பது நிச்சயமாக எட்டக்கூடிய இலக்குதான் என்று தமிழக ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) ‘மேம்பட்ட சூரிய ஒளிக்கதிர் தொழில்நுட்பம் மற்றும் விற்பனையாளர் சந்திப்பு’ ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசுகையில், “தமிழகம் ஏற்கெனவே 2,034 மெகா வாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தித் திட்டங்களை அமைத்துவிட்டது. எனவே தமிழகத்தின் 3,000 மெகா வாட் மின் உற்பத்தி என்பது எளிதில் அடையக் கூடிய இலக்குதான். மத்திய அரசு தரப்பிலிருந்து சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சோலார் பேனல் இறக்குமதிக்கான வரியை 5 சதவிகிதம் குறைத்ததும் அதில் அடங்கும். இதன் மூலம் மேற்கூரை சோலார் மின் உற்பத்திக்கான செலவுகள் 15 முதல் 20 சதவிகிதம் வரையில் குறையும்” என்றார்.
இந்தியாவின் மொத்த சோலார் மின் உற்பத்தி 175 கிகா வாட்டைத் தாண்டுவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும், அதில் இதுவரையில் 20 கிகா வாட் மின் உற்பத்தி அளவு எட்டப்பட்டுள்ளதாகவும் பன்வாரிலால் புரோஹித் கூறினார். சென்னையில் நடந்த இந்த சோலார் பணிமனை நிகழ்ச்சியானது தமிழக ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், ஆந்திர வர்த்தகக் கூட்டமைப்பு மற்றும் கேர்ஸ் ரிநியூவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் நடத்தப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் சோலார் மின் கட்டணங்கள் கிலோ வாட்டுக்கு 15 ரூபாய் குறைந்து ரூ.2.44 ஆக இருப்பதாக இந்நிகழ்ச்சியில் பன்வாரிலால் கூறியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக