2017ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை உலக வங்கி புதுப்பித்துள்ளது. அதில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.597 லட்சம் கோடி டாலராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2.582 லட்சம் கோடி டாலர் மதிப்பைக் கொண்டுள்ள ஃபிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஃபிரான்ஸ் ஏழாவது இடத்தில் இருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவில் 134 கோடிப் பேரும், ஃபிரான்ஸ் நாட்டில் 6.7 கோடிப் பேரும் இருப்பதாக உலக வங்கியின் இந்த அறிக்கை கூறுகிறது.
தொடர்ச்சியாகப் பல காலாண்டுகளாகப் பின்னடைவைச் சந்தித்து வந்த இந்தியப் பொருளாதாரம், 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதலே வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியதாகவும், பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டியால் ஏற்பட்ட தாக்கங்கள் சீராகி, உற்பத்தி மற்றும் நுகர்வோர் செலவினம் மேம்பட்டுள்ளதாகவும் உலக வங்கி இந்த வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்த ஆண்டில் 7.4 சதவிகிதமாகவும், 2019ஆம் ஆண்டில் 7.8 சதவிகிதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மேலும், 2032ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்று லண்டனைச் சேர்ந்த ’எகனாமிக்ஸ் & பிசினஸ் ரிசர்ச்’ என்ற ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கான பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாமிடத்திலும், ஜப்பான் மூன்றாமிடத்திலும், ஜெர்மனி நான்காமிடத்திலும், இங்கிலாந்து ஐந்தாமிடத்திலும் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக