நாகை மாவட்டம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியரின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அழுத காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லூரில் 1939ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது, தமிழக அரசு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமித்தும், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி, இப்பள்ளியில் பணியாற்றிவரும் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் இசபெல்லா ஜூலி என்பவரை வேறு பள்ளிக்குப் பணியிட மாற்றம் செய்து கல்வித் துறை உத்தரவிட்டது.
உத்தரவின்படி, வெள்ளிக்கிழமை மாலை ஆசிரியர் இசபெல்லா ஜூலி பள்ளி மாணவ, மாணவிகளிடமிருந்து விடைபெற்று வெளியேறும் சமயத்தில் மாணவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கண்ணீர்விட்டு அழுதவர்கள், வேறு பள்ளிக்கு செல்லக் கூடாது எனக் கூறினர். மாணவர்களின் இந்தச் செயலால் ஆசிரியரும் கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களும் ஆசிரியர் குறைப்பு நடவடிக்கைக்கும், பணியிட மாற்றத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் பகவானைப் போலவே, பாடம் சொல்லிக் கொடுக்கும் குரு என்பதைத் தாண்டி, மாணவர்களின் பாசப் பிணைப்புக்குள் நெருங்கிவிட்ட ஆசிரியை இசபெல்லா ஜூலி, அதே பள்ளியிலேயே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்பதே வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்து மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக