அரசிடம் மானியம், சலுகைகள் பெறும் அனைத்து பள்ளிகளும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்கு உட்பட்டவைதான் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித் துள்ளனர்.
வேலூர் மாவட்டம் கொண்டா புரத்தைச் சேர்ந்த ஜெ.முகமது அலி சித்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சில தகவல்களைக் கோரியிருந்தார்.
அதில், “வேலூரில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பள்ளி வளாகம், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அறிக்கையை அளிக்க வேண்டும். பள்ளியில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
ஆய்வாளருக்கு உத்தரவு
இதையடுத்து, அந்தத் தகவல்களை அளிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. இதையடுத்து முகமது அலி சித்திக் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் நிதியைப் பெறுகின்றன. அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு பல்வேறு நிதிச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. மேலும், பள்ளிகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இதுதவிர, பள்ளிகள் பயன்படுத்தும் மின்சாரம், தண்ணீருக்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் மானியம் அளிக்கின்றன. பள்ளி வாகனங்கள் பதிவின்போதும் சலுகை அளிக்கப்படுகிறது.
எனவே, அரசிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கண்ட மானியம், நிதி, சலுகைகள் பெறும் பள்ளிகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 2(எச்)-ன்படி பொது நிறுவனமாகவே கருதப்படும். பொது முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 4-ன் கீழ் பொது தகவல் அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.
சில கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனவே, பள்ளியை நிர்வகிக்கும் நபர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் குறித்தும் தெரிந்துகொள்ளும் உரிமை பெற்றோருக்கு உண்டு.
வழக்குகள் நிலுவையிலிருந்தால்
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் தங்களது வலை தளத்தில் தங்கள் பள்ளியின் தலைவர், அறங்காவலர்கள், முதல்வர், ஆசிரியர்கள், ஓட்டுநர் உள்ளிட்ட இதர பணியாளர்கள் யார் மீதாவது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும்.
இந்தத் தகவல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். குற்ற வழக்குகள் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்கும் தகவல்களை அளிக்குமாறு மாவட்ட குற்ற ஆவண காப்பகங்களுக்கு மாநில குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குநர் அறிவுறுத்த வேண்டும்.
16-ம் தேதிக்குள்...
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரக பொது தகவல் அலுவலர், மாநில குற்ற ஆவண காப்பக பொது தகவல் அலுவலர் ஆகியோர் ஆணையத்தில் ஜூலை 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தர விட்டுள்ளார்.
அரசிடம் சலுகைகள் பெறும் தனியார் பள்ளிகளும் ஆர்டிஐ வரம்புக்குள் வரும் என தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது குறித்து ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் அ.நாராயணனிடம் கேட்டதற்கு, “தகவல் அறியும் உரிமை சட்டம் வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநில தகவல் ஆணையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. தாமதமாக வந்தாலும் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. பெற்றோர்கள், கல்வியாளர்கள் இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
அரசாங்கத்தின் ஓர் அங்கம்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “பள்ளிகளை யார் நடத்தினாலும் அது அரசாங்கத்தின் ஓர் அங்கமாகவே கருதப்படும். அதை தனி நிறுவனமாகக் கருத முடியாது. எனவே, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது.
பள்ளிகள் குறித்த பொதுவான தகவல்களை ஒளிவுமறைவின்றி பெற்றோர்கள், மக்கள் தெரிந்துகொள்ள இந்த உத்தரவு வழி வகுக்கும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக