சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்குக் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதனால், இந்த கேள்விகளுக்குத் தலா 4 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் மார்க்சிஸ்ட் கட்சி எம்பி ரங்கராஜன்.
இந்த வழக்கில் இன்று (ஜூலை 10) தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வானது தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகளுக்கான 196 மதிப்பெண்களை வழங்க வேண்டுமென்று சிபிஎஸ்இ அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்க வேண்டுமெனவும், அதன் அடிப்படையில் கவுன்சலிங் நடத்தப்பட வேண்டுமெனவும் தமிழக மருத்துவக் கல்வித் துறையை அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலமாக நடந்துவரும் மருத்துவ கவுன்சலிங் நிறுத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த வழக்கைத் தொடர்ந்த டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு குழந்தைகள் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட துயரம் தாங்க முடியாதது என்று குறிப்பிட்டார். “இந்த ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் எழுதினார்கள். சிபிஎஸ்இ அமைப்பு எந்த ஒழுக்கங்களும் இல்லாமல் மாணவர்களைப் படுகொலை செய்துகொண்டே இருந்தது. மாணவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதினார்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக இருந்தன. இதனை எதிர்த்து வழக்குத் தொடர வேண்டுமென்று எங்கள் கட்சி கூறியது” என்று தெரிவித்தார். இந்த தவறான மொழிபெயர்ப்பானது அவுட்சோர்ஸிங் செய்ததன் விளைவு என்றும், அதனை எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்றும் அவர் கூறினார்.
எதிர்த் தரப்பிலிருந்த சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆங்கிலக் கேள்விதான் பொருத்தமானது என்று வாதிட்டதாகக் கூறினார். வழக்கைத் தொடர்ந்திருக்கும் இந்த டி.கே.ரங்கராஜன் யார் என்று அவர்கள் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்தார். “தவறாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு கேள்விக்குச் சரியான பதில் எப்படி எழுத முடியும் என்ற கேள்வி இயல்பாக எழுந்தது. தமிழில் தேர்வெழுதினாலும், அனைவருக்கும் ஒரே பலம் இருக்க வேண்டும். இதனை நீதிபதிகளும் உணர்ந்தார்கள். இரண்டு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலைத் தயார் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். இது மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியல்ல. தமிழ் மாணவர்களின், மக்களின் வெற்றி” என்று கூறினார் ரங்கராஜன். உயர் நீதிமன்றம் சொன்னதைத் தமிழக அரசு செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதாகத் தன் பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
“தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம். இங்கு, ஒரு கல்லூரியிலேயே கூடுதலான இடங்களை ஒதுக்க முடியும். புதிய கட்டிடங்களை வாடகைக்கு எடுக்க முடியும். அனைவருக்கும் இடம் கிடைத்தால், நாட்டுக்குச்சேவை செய்யும் மருத்துவர்கள் கிடைப்பார்கள்” என்றார் ரங்கராஜன்.
இந்த வழக்கில் டி.கே.ரங்கராஜன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஷாஜி செல்லன், தொடக்கத்திலிருந்தே நல்லெண்ணத்தோடு சிபிஎஸ்இ அமைப்பு செயல்படவில்லை என்றார். “முடிவுகள் வெளியானவுடனேயே, 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட விவகாரத்தை எழுப்பினார் டி.கே.ரங்கராஜன். அதனைச் சரிசெய்யும் எந்த நடவடிக்கையையும் சிபிஎஸ்இ எடுக்கவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அதனால் கேவியட் போன்ற விஷயங்களின் மூலமாக, இந்தத் தீர்ப்பை நிலைநிறுத்த முயற்சிப்போம்” என்று கூறினார் ஷாஜி செல்லன்.
“எந்த விதத்தில் மருத்துவரைத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு முறை இருக்கிறது. வெனிசுலாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் கியூபாவுக்குச் சென்று மருத்துவம் படிப்பார்கள். அவர்கள் வைக்கும் தேர்வில் வெற்றி பெற்றபிறகு, மருத்துவர் ஆவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் புராஜக்ட் செய்ததாகச் சான்றிதழ் அளித்த மாணவிக்கு இங்கிலாந்தில் மருத்துவக் கல்வி இடம் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண் கல், மண், மரத்தை வைத்து வீடு கட்டும் புராஜக்ட் செய்தார். அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இதற்குக் காரணம், அடிப்படையில் நோயாளியின் மீது மருத்துவருக்கு அக்கறை வேண்டும். இன்று மெரிட்டில் வரும் மாணவர்களுக்கு இந்த அக்கறை இருக்கிறதா? நீட் தேர்வு மருத்துவக் கல்விக்கான எந்த தகுதியை அளவிடுகிறது” என்று கேள்வி எழுப்பினார் சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் குழுவைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி.
பிழையான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வில் மதிப்பெண் வழங்க வேண்டியது அவசியம் எனவும் புகழேந்தி கூறினார். இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் இது பெரிய பிரச்சினை இல்லை என்றும், மருத்துவ மாணவர்களுக்கு உண்மையான அக்கறையை வளர்த்தெடுக்க வேண்டுமெனவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக