கேரள வெள்ள நிவாரண நிதிக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கி சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா.
கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம். இதனால், அங்கு சுமார் 19,512 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 324 பேருக்கும் மேலாக, இந்த வெள்ளத்தில் சிக்கிப் பலியாகியுள்ளனர். சுமார் 3.14 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி செய்யும் விதமாக மாநில அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புகழ்பெற்ற பேடிஎம் நிறுவன உரிமையாளர் விஜய் சேகர் சர்மா சமூக வலைதளங்களில் பலரது கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார். இதற்கு, அவர் அளித்த வெள்ள நிவாரணத்தொகையே காரணம்.
கடந்த 17ஆம் தேதியன்று, தான் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு 10,000 ரூபாய் அளித்ததாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா. இதற்கான ரசீதையும் அதில் இணைத்திருந்தார். மேலும், ‘அனைவரும் உங்களுடைய பேடிஎம் செயலியைத் திறந்து நிதியுதவி செய்யுங்கள்’ என்றும் தனது நிறுவனத்தையும் விளம்பரப்படுத்தி இருந்தார்.
இதற்குச் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பவே, உடனடியாகத் தனது பதிவை நீக்கிவிட்டார் விஜய் சேகர். ஆனாலும், அந்த ஸ்கீரின் ஷாட் தற்போது வரை சமூக வலைதளங்களில் கிண்டலை வாரிக் குவித்து வருகிறது. அதேவேளையில், கடந்த 48 மணி நேரத்தில் பேடிஎம் நிறுவனம் மூலமாக சுமார் 3 கோடி ரூபாய் வரை திரட்டப்பட்டுள்ளது.
சுமார் 11,865 கோடி மதிப்புடைய நிறுவனங்களின் உரிமையாளர் ஒருவரால், 10,000 ரூபாயை விட அதிகத் தொகையை எவ்வாறு கொடுக்க முடியும் என்று கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதுபோன்று வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாவது விஜய் சேகருக்குப் புதிதல்ல. கடந்த ஆண்டு ராணுவப் படைகளின் கொடி நாள் நிவாரண நிதிக்காக 500 ரூபாய் அளித்திருந்தார். அப்போதும், இதேபோல கிண்டலுக்கு ஆளானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக