கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்குத் திரும்பிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2003 - 2004ஆம் ஆண்டுகளில் இளநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பணி இடத்துக்கு விண்ணப்பித்த மேகலை என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர், அப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
ஆனால், அவர் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை. கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதால் அவரைத் தாழ்த்தப்பட்ட பிரிவினராகக் கருத முடியாது என அவருக்குப் பணி நியமனம் வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்தும், தனக்குப் பணி நியமனம் வழங்கக் கோரியும், மேகலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2005ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அவருக்குப் பணி நியமனம் வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்துவாக மாறிய அவருக்குச் சலுகைகள் வழங்க முடியாது என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோர் உள்ளூர் மக்களிடம் தீவிரமாக விசாரித்த பிறகே, மேகலைக்கு தாழ்த்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரது நியமனம் உறுதி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக