அறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை!



அறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை! காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்
"அப்துல் கலாம் அனைத்து மதத்தினரையும் சரிசமமாக மதித்து, மரியாதை அளித்தவர். இதனை மாணவர்களுக்கு உணர்த்தும்விதத்தில் குரான், பகவத் கீதை, பைபிள் ஆகியவற்றை வைத்திருக்கிறோம். அதிலிருந்து அவ்வப்போது சில பகுதிகளை வாசிக்கவும் செய்கிறோம்."
அறிவியல் சிந்தனையை வளர்க்கும் கலாம் வகுப்பறை! காரைக்குடி பள்ளி ஆச்சர்யம்
சிலரின் பெயர்களே மற்றவர்களுக்கு உத்வேகம் தரும் சக்தியாக இருக்கும். அவரின் உழைப்பே அந்தச் சக்தியைத் தந்தது எனத் தனியே சொல்லவேண்டியதில்லை. `மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு பெயரைச் சொல்லுங்க?' என்று கேட்டால், சற்றும் தயங்காமல் பலரும் சொல்லும் பெயர், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

அறிவியல்
இந்தியாவின் தென்கோடியில் பிறந்து, நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்து, தன்னம்பிக்கைப் பாடம் நடத்தும் வாழ்க்கையை வாழ்ந்தவர். விஞ்ஞானி, குடியரசுத் தலைவர் எனப் பதவிகள் உயர்ந்தபோதும், மாணவர்களைச் சந்திப்பதை அவர் நிறுத்திக்கொண்டதே இல்லை. அந்தளவுக்கு மாணவர்கள் மீது அன்பும், அவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையும் கொண்டவர். குழந்தைகளும் அவரை தங்களில் ஒருவராக நேசித்துப் பழகினர். இறந்த பின்பும் மாணவர்களுக்கு வழிகாட்டியவாறே உள்ளார். அப்படித்தான், காரைக்குடி அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், கலாம் வகுப்பறையாக வாழ்ந்துவருகிறார்.
அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரைக்குடி. ஶ்ரீகார்த்திகேயன் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில்தான் இந்தக் கலாம் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புது முயற்சியை முன்னெடுக்கும் ஆசிரியர் லட்சுமியிடம் பேசினோம்.
``நான் ஆசிரியர் பயிற்சியில் இருந்தபோதே அப்துல் கலாம் ஐயா பற்றிப் படிப்பதில் ரொம்ப ஆர்வம். நமக்கு வேலை கிடைத்ததும், அவரின் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துக்கொண்டேன். மாணவர்களுக்கு வழிகாட்டியாக ஒருவரை நாம் காட்டும்போது, அவரை அப்படியே பின்பற்றுவார்கள். அதனால், சரியான ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு, அப்துல் கலாம் ஐயா மிகப் பொருத்தமானவர் இல்லையா?
என்னுடைய எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் ஒரு முயற்சிதான் கலாம் வகுப்பறை. இங்கே, ஆய்வகம் ஒன்று உள்ளது. நான்கு டம்ளர்களில் நீர் ஊற்றிவைத்து, குச்சியில் தட்டும்போது ஏற்படும் ஓசை மாற்றம் பற்றி விளக்குவது போன்ற எளிமையான அறிவியல் சோதனைகளைச் செய்கிறோம். கலாம் நூலகமும் வைத்துள்ளோம். அதில், அப்துல் கலாம் எழுதிய நூல்கள், அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய புத்தகங்கள் எனத் தேடித் தேடிச் சேகரித்துள்ளோம். அவற்றிலிருந்து மாணவர்களுக்கு விருப்பமான புத்தகங்களை எடுத்து வாசிக்கச் சொல்வேன். தான் படித்தவற்றை மற்ற மாணவர்களோடு குழுவாக விவாதிக்கச் சொல்வேன். இது அந்த நூலை மற்றவர்களும் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.

ழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுடன், ஆறாவது பாடமாக அப்துல் கலாம் பாடத்தை நடத்திவருகிறேன். அதற்கென நான் தயாரித்த புத்தகத்தை ஜூன் மாதத்திலேயே மாணவர்களிடம் கொடுத்துவிடுவேன். அதில், அவரின் பிறப்பு, படிப்பு, பார்த்த வேலைகள், வகித்த பதவிகள், அளப்பரிய சாதனைகள் என அனைத்தும் இடம்பெற்றிருக்கும். மாணவர்கள் விரும்பிப் படிக்கும் அந்தப் பாடங்களிலிருந்து சிறு சிறு தேர்வுகள் நடத்துவேன். மற்ற பாடங்கள்போலவே இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறார்கள். இதன்மூலம், கலாம் பற்றியச் செய்திகள் மிகத் துல்லியமாக மனதில் பதிகின்றன. எப்போது கேட்டாலும் தயக்கமின்றி தகவல்களைக் கூறுவார்கள்.
அப்துல் கலாம் அனைத்து மதத்தினரையும் சரிசமமாக மதித்து, மரியாதை அளித்தவர். இதனை மாணவர்களுக்கு உணர்த்தும்விதத்தில் குரான், பகவத் கீதை, பைபிள் ஆகியவற்றை வைத்திருக்கிறோம். அதிலிருந்து அவ்வப்போது சில பகுதிகளை வாசிக்கவும் செய்கிறோம். வெள்ளிக்கிழமை பிரேயரில் மும்மத பாடல்களைப் பாடுகிறோம். அப்துல் கலாமே மிகவும் போற்றிய நூல் திருக்குறள். பலரையும் படிக்கச் சொல்வார்.  அதையும் நான்காம் நூலாக வைத்திருக்கிறோம். படிப்பதற்கு எளிதாகவும், பின்பற்றுவதற்கு மிகச்சரியானதாகவும் இருப்பவை திருக்குறள்.
கலாம்
அப்துல் கலாம் பிறந்தநாளின்போது அவரின் கருத்துகள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியபடி ஊர்வலம் செல்வது, சொற்பொழிவுகளை நடத்துவது என அந்த நாளின் முழு அர்த்தத்தை உணர்த்துகிறோம். ஒரு கிராமத்தில், கலாம் பெயரில் குடிசைத் தொழிலாக ஊறுகாய் தயாரிப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். கலாம் உருவம் பொறித்த சாவிக் கொத்துகள், லேபிள்கள், பேனா என எங்கே எது கிடைத்தாலும், சேகரித்துவந்து கலாம் வகுப்பறையை அலங்கரிக்கிறோம். முக்கியமாக, நாங்கள் தயாரிக்கும் கலாம் காலண்டர். அவரின் பொன்மொழிகளைத் தாங்கிய காலண்டரைப் பள்ளியில் படிக்கும் 350 மாணவர்களுக்கும் இலவசமாகக் கொடுக்கிறோம். இந்த முயற்சிகள் அனைத்துக்கும் உறுதுணையாக பெரும் உதவிகளையும் செய்து ஊக்கமளிப்பவர், பள்ளியின் தலைமை ஆசிரியர் வேதா.


என்னுடைய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அப்துல் கலாம் போன்ற ஆளுமை உருவாவதற்கான விதையைச் சின்ன வயதிலேயே ஊன்ற வேண்டும். என்னால் முடிந்த அளவு அதைச் செய்துவருகிறேன்'' என நிறைவுடன் சிரிக்கிறார் லட்சுமி

Subscribe Here