வடகிழக்கு பருவமழை புதன்கிழமை தொடங்க அதிக வாய்ப்பு: ரமணன் தகவல்
வடகிழக்கு பருவமழை (புதன்கிழமை) தொடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக வானிலை நிலவரம் குறித்த தகவல்களை தெரிவித்தார். அப்போது அவர், "இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் வலுபெறாமல் அதே இடத்திலேயே உள்ளது.
இதனால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னையைப் பொருத்த வரை மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நேற்று முன் தினம் (திங்கள்கிழமை) நிலவரப்படி அதிகபட்சமாக பொன்னேரியில் 2 செ.மீ மழையும், சாத்தான்குளத்தில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்பதால், இன்று (28-ம் தேதி) வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக