முதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின்படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் நிகழாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஓராண்டாக இருந்த படிப்பு தற்போது இரண்டு ஆண்டுகளாக உயர்ந்ததால் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு குறைந்தது. ஒவ்வொரு ஆண்டும், அரசு, அரசு உதவிபெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். இடங்கள் முழுவதும் நிரம்பிவிடும் நிலையில், 2015-16 கல்வியாண்டு கலந்தாய்வு முடிவில் 100 இடங்களுக்கு மேல் சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருந்தன. இதுபோல் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. இதுபோல, எம்.எட். படிப்பிலும் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. பல கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்கின்றனர். பி.எட். கலந்தாய்வு நடத்திய சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், மொத்தமுள்ள 50 எம்.எட். இடங்களில் 20 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால், வருகிற 30-ஆம் தேதியோடு முடிக்கப்பட இருந்த எம்.எட். சேர்க்கையை, இப்போது நவம்பர் 6-ஆம் தேதி வரை கல்லூரி நிர்வாகம் நீட்டித்துள்ளது. இதுபோல் மேலும் சில அரசுக் கல்லூரிகளும் எம்.எட். படிப்புக்கான சேர்க்கைத் தேதியை நீட்டித்துள்ளன. இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் கூறியது: மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு படிப்புக் காலம் உயர்த்தப்பட்டதே காரணம். இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 2-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்க உள்ள தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக