அரசுப் பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடத்தின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மாணவர்கள் 5 பேர் பலத்த காயமடைந்தனர். விளாத்திகுளம் அருகேயுள்ள இ.ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 34 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் பள்ளி வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அமர்ந்து பயிலும் வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரையானது மழையில் சேதமடைந்து பெயர்ந்து விழுந்தது. இதில் வகுப்பறையில் அமர்ந்திருந்த 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொன்பாண்டி (8), விக்னேஷ் பாரதி (8), செல்வகுமார் (8), பிருந்தாராணி (8), பானுபிரியா (8) ஆகிய 5 பேரின் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியை சந்திரா மற்றும் இ.ரெட்டியபட்டி கிராம மக்கள் காயமடைந்த மாணவர்களை உடனடியாக மீட்டு நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பவந்தீஸ்வரன், புதூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தனஞ்செயன் உள்ளிட்டோர் விரைந்து சென்று பள்ளிக் கட்டடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக