குமரி மாவட்டத்துக்கு இடமாறுதலில் வந்த ஆசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலிசார் விசாரணை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குமரி மாவட்டத்துக்கு இடமாறுதலில் வந்த ஆசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலிசார் விசாரணை

பிற மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு இடமாறுதலில் வந்த ஆசிரியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


நாகர்கோவில் : தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடைவிடுமுறையை தொடர்ந்து ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். தொடக்க கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை என்று தனித்தனியே இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வின்போது காலியிடங்கள் மறைக்கப்படுவதாக ஆசிரியர்கள் சங்கங்கள் குற்றம் சாட்டுவதுண்டு. இவ்வாறு காலியிடங்கள் மறைக்கப்பட்டுள்ள இடங்களில் பின்னர் ஆசிரியர்கள் நிரப்பப்படுவர். இதில் லஞ்ச பணம் கைமாறுவதாகவும் புகார் எழுந்தது. இந்தநிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்று வந்த ஆசிரியர்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் விசாரணையில் இறங்கியுள்ளனர். இடமாறுதல் பெற்ற சுமார் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அழைத்து நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவர் இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். பிற மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்ற ஒவ்வொரு ஆசிரியரும் கலந்தாய்வு மூலம்தான் இடமாறுதல் பெற்றாரா அல்லது அதிகாரிகளிடம் நேரடியாக விண்ணப்பித்து மாறுதல் பெறப்பட்டதா, அரசியல் கட்சியினரை அணுகி அதன் மூலம் மறைமுகமாக மாறுதல் கிடைக்கப்பெற்றதா, அதற்காக யாருக்கும் லஞ்சமாக பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. முதல் நாள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் இதன் தொடர்ச்சியாக நேற்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கே அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆசிரியர்கள் இடமாறுதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று விசாரணை நடத்தப்படுகிறது’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here