உதவித்தொகைக்கு வருமான வரம்பு நீக்கம்:
அரசு பள்ளி எம்.பி.சி., மாணவியர் பயன் தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் எம்.பி.சி., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியருக்கு, ஆண்டுக்கு, 1,000 ரூபாய் வீதம், ஆறாம் வகுப்பிலிருந்து, உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவியரின், குடும்ப ஆண்டு வருமானம், 25 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது. அதிகரித்து வரும் விலைவாசியால், 25 ஆயிரம் ஆண்டு வருமானம் என சான்றிதழ் வழங்குவதில், வருவாய்த்துறை அலுவலர்கள் தயக்கம் காட்டினர். இதனால், பல மாணவியர் உதவித்தொகை பெற முடியாமல் போனது. இதற்காக, வருமான வரம்பை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை இருந்து வந்தது. தற்போது, வருமான வரம்பை நீக்கி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவியர் அனைவருக்கும், உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, விடுபட்ட மாணவியரின் வங்கிக்கணக்கு விபரங்களை சேகரிக்கும் பணியை, விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக