கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள்வலியுறுத்தல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள்வலியுறுத்தல்

கல்வியை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாட்டை இந்தியா நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது,

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

கல்விச் சேவையை வணிகமயமாக்கும் நடவடிக்கையை உலக வர்த்தக அமைப்பு 2001 முதல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 160 நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள இந்த அமைப்பின் மாநாடுகளில் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தை இன்னும் நிறைவடையவில்லை. இந்த நிலையில், கென்யாவின் தலைநகர் நெய்ரோபியில் டிசம்பர் 15 முதல் 18 வரை உலக வர்த்தக அமைப்பின் 10-ஆவது மாநாடு நடைபெறுகிறது. ஏற்கெனவே, தாராளமய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தியுள்ள இந்தியா, இந்த மாநாட்டில் கல்வித் துறையை வர்த்தகப் பொருளாக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

அவ்வாறு ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதோடு, உயர்கல்வி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கப்படுவர். இடஒதுக்கீடு நடைமுறை பின்னுக்குத் தள்ளப்படும். எனவே, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வியை வர்த்தக மயமாக்கும் நிபந்தனைகளை இந்திய அரசு நிராகரிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்:

கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வித் துறையை வர்த்தகமாக மாற்றும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. அவ்வாறு கையெழுத்திடுமானால், பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக ரீதியில் பல்கலைக்கழகங்களை தொடங்கும் நிலை உருவாகும். மத்திய அரசு இப்போது பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் வழங்கி வரும் மானியங்கள், இடஓதுக்கீடு ரத்து செய்யப்படும். இதனால், ஏழை மற்றும் சமூகத்தில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும். எனவே, மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here