அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை அளிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தன்னார்வமாக ஒரு நாள் ஊதியத்தை அளிக்க விரும்பும் ஊழியர்கள், அதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பளம் வழங்கும் அலுவலர், டிசம்பர் மாதத்துக்கான ஊதியத்தை 31 நாள்களைக் கொண்டு வகுத்து ஒரு நாள் ஊதியத்தை கணக்கிடுவார். இந்த ஒரு நாள் ஊதியத்துக்கான பட்டிலை சம்பந்தப்பட்ட கருவூல கணக்குத் துறை அதிகாரிகள், தயார் செய்வர்.

ஒரு நாள் ஊதியத்துக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். மேலும், இந்தக் காசோலையுடன் ஊதியத்தை அளித்த ஊழியரின் பெயர், பதவி, பணிபுரியும் அலுவலகம் ஆகிய தகவல்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். காசோலையுடன் கூடிய இந்தத் தகவல் அடங்கிய பட்டியலை சம்பந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். நிதி அளிக்கும் இந்தப் பணிக்கென துறைத் தலைமையால் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு அதிகாரி ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், காசோலையையும், ஊதியம் வழங்கிய ஊழியர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித் துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைப்பார். துறைத் தலைமை அலுவலகங்களிலும், தலைமைச் செயலகத்திலும் இதேபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

100 சதவீத வருமான விலக்கு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிப்போருக்கு 100 சதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், ஊதியத்தைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நிதி அளிக்கும் ஊழியர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படும். இதைக் கொண்டும் வரி விலக்கு பெறலாம். ஒரு நாளைக்கு மேலான ஊதியத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்திடலாம். டிசம்பர் மாதத்தில் மீதமுள்ள ஊதியம் அனைத்தும் வழக்கமான முறையில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும்.

இந்த உத்தரவுகள் உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசிடம் இருந்து மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், தொகுப்பூதியம் பெறுவோருக்குப் பொருந்தும். தன்னார்வமாகவே இருக்க வேண்டும்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி அளிப்பதை ஒவ்வொரு ஊழியரும் தன்னார்வமாகவே அளிப்பதை, சம்பளம் வழங்கும் அதிகாரிகள்-அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here