பணி ஓய்வுக்குப் பிறகு ? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பணி ஓய்வுக்குப் பிறகு ?

தற்போது 30 வயதுக்குள் இருக்கும் நபர்களிடம் சென்று ஓய்வுகாலத்துக்கு முதலீடு செய்துவிட்டீர்களா என்று கேட்டால், அதற்கு இப்போது என்ன அவசரம் என்று பதில் கேள்வி கேட்பார்கள். ஆனால் இப்போது சேமிக்க முடியாவிட்டால் எப்போதும் சேமிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இப்போது ஏன்?

ஓய்வு காலத்துக்கு இப்போதே திட்டமிட வேண்டியது அவசியம். இதற்கு பல காரணங்கள். முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை இருந்தது. அதனால் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுபவர்கள் சிலர் இருந்தனர். ஆனால் இப்போது தனிக்குடும்ப சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில், ஓய்வு காலத்துக்கு பிறகு வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறைவு. பணிபுரியும் அனைவருக்கும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால் இப்போது சேமிக்கும் தொகைதான் வருங்காலத்தில் பயன்படும். வாழ்க்கை முறை பொதுவாக இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பணி ஓய்வுக்கு பிறகு 20 ஆண்டுகள் வாழ்வது என்பது இப்போது சாதாரணமாகி விட்டது. அதனால் 60 வயதுக்கு பிறகு நமக்கு என்ன செலவு இருக்கப்போகிறது என்று யோசிப்பதை விட்டுவிடுங்கள். அதுபோல இப்போது ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு தொகை அப்போது பல மடங்கு அதிகரிக்கும். இந்த பணவீக்கத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. வாடகை வீட்டில் இருந்தால் இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு வாடகை எந்த அளவுக்கு உயரும், விலைவாசி எவ்வளவு உயரும் என்பதை முன்கூட்டியே திட்டமிடவேண்டும். இத்தனை சவால்களை சந்திக்க வேண்டும் என்றால் ஓய்வுக்காலத்துக்கு இப்போதே முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.

எதில், ஏன்?

ஓய்வு காலத்துக்கு பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆயூள் காப்பீடு, புதிய பென்ஷன் திட்டம், பிபிஎப் உள்ளிட்ட பல வகையான முதலீட்டு திட்டங்கள் இதுவரை இருந்தன. இப்போது மியூச்சுவல் பண்ட்களிலும் இதுபோன்ற திட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பிராங்க்ளின் இந்தியா மற்றும் யூடிஐ மியூச்சுவல் பண்ட்களில் இந்த வகையிலான பண்ட்கள் இருந்தாலும், கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் இதுபோன்ற ஓய்வு கால பண்டை அறிமுகப்படுத்தியது.

கடந்த வாரத்தில் ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் ஓய்வு கால பண்டுக்கான என்.எப்.ஓ (புதிய பண்ட் வெளியீடு) முடிந்துள்ளது. மேலும், எஸ்பிஐ, ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, கனரா ராபிகோ, ஐடிபிஐ, டிஎஸ்பி பிளாக்ராக், பிர்லா சன்லைப் மற்றும் எல்ஐசி நொமுரா ஆகிய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இதுபோல ஓய்வு கால பண்ட் வெளியிட செபியிடம் அனுமதி கோரியிருக்கின்றன. பட்ஜெட்டுக்கு பிறகு இந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

சலுகைகள் என்ன?

வரிவிலக்கு மியூச்சுவல் பண்ட் திட்டமான இஎல்எஸ்எஸ் திட்டங்களுக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இந்த இஎல்எஸ்எஸ் வகை பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை மூன்று வருடத்துக்கு வெளியே எடுக்க முடியாது. அதுபோல ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் செய்யப்படும் முதலீட்டை ஐந்து வருடங்களுக்கு எடுக்க முடியாது. ஐந்து வருடம் முடிந்தாலும், 60 வயதுக்கு முன்பாக முதலீட்டை எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டிய தேவை இருந்தால் வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த பண்டில் மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முழுவதும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள். 60-80 சதவீதம் வரை பங்குச்சந்தை முதலீடு செய்வது, 5-30 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். வயது குறைவாக இருப்பவர்கள் முழுவதும் ரிஸ்க் உள்ள பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களிலும், நடுத்தர வயதில் இருப்பவர்கள் பங்குச்சந்தை சார்ந்த பேலன்ஸ்டு பண்டையும், 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கடன் சந்தை சார்ந்த பேலன்ஸ்ட் பண்டையும் தேர்வு செய்யலாம். என்பிஎஸ் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் அதிகபட்சம் 50 சதவீதம் வரை மட்டுமே பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் மியூச்சுவல் பண்ட்களில் 100 சதவீதம் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. தவிர என்பிஎஸ் அல்லது இன்ஷூரன்ஸில் உள்ள பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்த மொத்த தொகையையும் எடுக்க முடியாது. குறிப்பிட்ட தொகையை ஆனுட்டி திட்டங்களில் முதலீடு செய்தே மாதந்தோறும் தொகையை வாங்க முடியும். ஆனால் இங்கு எஸ்டிபி முறையில் ஒவ்வொரு மாதமும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மொத்தமாக வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ள முடியும்.

முதலீடு செய்யலாமா?

புதிதாக வந்திருக்கும் ஓய்வு கால மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாமா என்று நிதி ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். பொதுவாக புதிய பண்ட் வெளியீடுகளை நான் பரிந்துரை செய்வதில்லை. ஒரு பண்டின் செயல்பாடு, பண்ட் நிர்வாகி, மியூச்சுவல் பண்ட் நிறுவனம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிறகே பரிந்துரை செய்வேன். ஆனால் பெரும்பாலான முதலீடுகள் இலக்கில்லாமல் செய்யப்படுபவையாக இருக்கின்றன. பலர் முதலீட்டை பாதியில் எடுக்கிறார்கள். சிலர் அவசியமாகவும், சிலர் அநாவசியமாகவும் முதலீட்டை பாதியில் திரும்ப பெருகின்றனர். ஓய்வு சமயத்தில் பார்க்கும் போது அவர்களிடம் போதுமான நிதி இருப்பதில்லை. இது போன்ற சமயங்களில்தான் இலக்குகளுடன் கூடிய முதலீடுகள் அவசியமாகின்றன. ஒரு இலக்குடன் முதலீடு செய்யும் போது அந்த தொகையை வெளியே எடுக்க முடியாது. எடுக்கும் பட்சத்தில் ஒரு சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதனால் முதலீட்டை திரும்ப பெறாமல் தொடரவே வாய்ப்புகள் அதிகம். இந்த கட்டுப்பாடு அவசியம் என்றே தோன்றுகிறது. சாதாரண ஈக்விட்டி பண்ட்கள் அல்லது சந்தையில் சிறப்பாக செயல்படும் இஎல்எஸ்எஸ் பண்ட்களின் வருமானத்துடன் ஒப்பிடும் போது இதுபோன்ற புதிய ஓய்வுகால பண்ட்களின் வருமானம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஆனால் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது கணிசமான வருமானம் கிடைக்கலாம். ஓய்வு பெற்ற கவலை வேண்டுமானாலும் பட முடியுமே தவிர, திட்டமிட முடியாது. திட்டமிடலை இப்போது தொடங்க வேண்டும் என்றார். உங்கள் திட்டத்தை எப்போது தொடங்கபோகிறீர்கள்? -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here