ராமநாதபுரம்:பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் அருகில் உள்ளமாசடைந்த ஊருணி நீரை மாணவர்கள் பருகி வருகின்றனர்.ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. தலைமை ஆசிரியையாக லுார்து ஜோஸ்பின் பணியாற்றுகிறார்.
பள்ளியில் 355 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 17 ஆசிரியர்கள் உள்ளனர். இந்த பள்ளியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளது. கழிப்பறைகளுக்கும் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிப்பிடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், இவ்வளவு மாணவர்களுக்கும் குடிநீர்வசதி சுத்தமாக இல்லை. இதனால், மாணவர்கள் அருகில் உள்ள ஓட்டல்கள், வீடுகளுக்கு சென்று தாகத்தை தீர்க்கின்றனர்.ஏராளமான மாணவர்கள் பள்ளி முன் உள்ள பொது ஊருணியில் சாப்பிட்டு கை கழுவுவதுடன், அந்த தண்ணீரையே குடிக்கின்றனர்.
பொதுமக்கள் குளிப்பது, துவைப்பது என பயன்படுத்தும் ஊருணி நீரை மாணவர்கள் பருகும் நிலை உள்ளதால் நோய் பாதிப்பு அபாயம் உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பள்ளி கட்டட மராமத்து வேலை என்ற பெயரில், கண்துடைப்பு பணிகளை மட்டும் செய்தனர். சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்கவில்லை, என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக