சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி என்பது பற்றி அவரை வீழ்த்திய சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் விஜயகுமார் புத்தகம் எழுதி வருகிறார். சந்தன வீரப்பன் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் வனப்பகுதிகளில் 20 ஆண்டுகளாக தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தவர்
சந்தன கடத்தல் வீரப்பன். போலீஸ், வனத்துறையினர் உள்பட 180 பேரை கொலை செய்ததாகவும், 200-க்கும் மேற்பட்ட யானைகளை கொன்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கு ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார் தலைவராக நியமிக்கப்பட்டார்
வீரப்பன் வேட்டைக்கு ‘ஆபரேஷன் கூகுன்’ (பட்டுப்பூச்சி ஆபரேஷன்) என்று பெயர் சூட்டப்பட்டது. வீரப்பன் நடமாடும் காட்டுக்குள் விவசாய தொழிலாளியாகவும், வியாபாரியாகவும் அதிரடிப்படையினர் ஊடுருவினர். ஒரு போலீஸ்காரர், வீரப்பன் கூட்டத்திலேயே சேர்ந்து விட்டார். சுட்டுக் கொலை கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி, வீரப்பன் தனது கண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அவரை வீரப்பன் கும்பலில் இருந்த போலீஸ்காரர், காட்டை விட்டு வெளியே அழைத்து வந்து, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்தில் ஆம்புலன்ஸ் போல் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனுக்கு கூட்டி வந்தார். அதன் அருகே அதிரடிப்படை வீரர்கள் பதுங்கி இருந்தனர்.
வீரப்பனும், கூட்டாளிகளும் ஆம்புலன்சில் ஏறி அமர்ந்தவுடன், அதிரடிப்படை வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். சரண் அடைந்து விடுமாறு முதலில் எச்சரிக்கை விடுத்தனர். அதை பொருட்படுத்தாமல், வீரப்பன் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுடவே, அதிரடிப்படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். அதில், சம்பவ இடத்திலேயே வீரப்பன் பலியானார். அவருடைய கூட்டாளிகள், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தனர். புத்தகம் எழுதுகிறார்
வீரப்பனுக்கு எதிரான இந்த வேட்டையை தலைமை தாங்கி வழிநடத்திய அப்போதைய சிறப்பு அதிரடிப்படை தலைவர் விஜயகுமார், பின்னர், சி.ஆர்.பி.எப். தலைவராக பணியாற்றி, ஓய்வு பெற்று விட்டார். தற்போது அவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி என்பது பற்றி அவர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:- வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி தெளிவான, சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதற்காகவே இந்த புத்தகத்தை எழுதி வருகிறேன். இது எனது நேரடி அனுபவம் நிறைந்த புத்தகம். உண்மையான தகவல்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக, சிலரது பெயர்களை குறிப்பிடாமல் விட்டிருக்கிறேன். மற்றபடி, அனைத்து தகவல்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக