பி.இ. கலந்தாய்வின் முதல் நாளில் 7 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடத்தை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர். அரசு மருத்துவக் கல்லூரிகள், சிறந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சிலர், தாங்கள் தேர்வு செய்த எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று பி.இ. படிப்பைத் தேர்வு செய்வது ஆண்டுக்கு ஆண்டு தொடர்கிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேரும் மாணவர் ஆண்டுக்கு ரூ. 11,000 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆனால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியச் சூழல் உள்ளது. இதை செலுத்த முடியாத சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு, பி.இ. இடத்தைத் தேர்வு செய்வது வழக்கம். அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு பொதுப் பிரிவு பொறியியல் கலந்தாய்வு தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 7 பேர் தங்களின் எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பி.இ. படிப்பைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதத்தையும் பெற்றுச் சென்றனர். இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள், மூன்றாம் நாள் பொறியியல் கலந்தாய்விலும் சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த 7 பேரில் கோவையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கிடைத்த எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த முரளி பிரசாத். இவரும் ஆரம்பம் முதல் பி.இ. சேரும் ஆர்வத்திலேயே இருந்துள்ளார். அதன் காரணமாகவே, அரசு எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு பி.இ. சேர்ந்திருக்கிறார். இவருடைய பி.இ. கட்-ஆஃப் 198.50 ஆகும். இதேபோல, சென்னையைச் சேர்ந்த சவுமியா, சென்னை அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கிடைத்த எம்.பி.பி.எஸ். இடத்தை உதறிவிட்டு, அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒன்றான அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி. டெக்) பி.டெக். கெமிக்கல் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளார். இவருடைய மருத்துவ கட்-ஆஃப் 197.75. பொறியியல் கட்-ஆஃப் 198.25. இதுகுறித்து சவுமியா கூறியதாவது: கெமிக்கல் பொறியாளராவதுதான் எனது லட்சியம். அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில்தான் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்திருந்தேன். இந்த நிலையில், எதிர்பார்த்ததுபோல் பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கெமிக்கல் பொறியியல் இடம் கிடைத்தது. எனவே, எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு, அதில் சேர உள்ளேன் என்றார் அவர். ஈரோட்டைச் சேர்ந்த தமிழிக்கு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்தது. ஆனால், அந்த இடத்தை ஒப்படைத்துவிட்டு இப்போது கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்திருக்கிறார்.
இவருடைய பி.இ. கட்-ஆஃப் 197.75. இவருடைய தந்தை, தாய் இருவரும் பொறியியல் பட்டதாரிகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து தமிழி கூறியதாவது: நிர்வாகம் சார்ந்த பணிக்குச் செல்வதுதான் எனது குறிக்கோள். சிறந்த கல்லூரியில் பி.இ. கிடைக்குமா என்ற சந்தேகத்தில், எம்.பி.பி.எஸ். தேர்வு செய்திருந்தேன். பின்னர், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று, நினைத்ததுபோலவே பி.எஸ்.ஜி. கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மருத்துவப் படிப்பைத் தவிர்த்ததற்கு, அதன் நீண்ட படிப்புக் காலமும் ஒரு காரணம். எம்.பி.பி.எஸ். ஐந்தரை ஆண்டுகள், அதன்பிறகு முதுநிலைப் படிப்பு இரண்டு ஆண்டுகள் முடித்த பிறகுதான் நல்ல மருத்துவப் பணி வாய்ப்பு கிடைக்கும். ஆனால். பி.இ. அப்படியல்ல என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக