தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை இணையதளம் மூலம் உறுதி செய்துகொள்ளலாம். சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org-இல் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ள மாணவர்கள், சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 மதிப்பெண், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண்டு ஆகியவற்றைப் பூர்த்தி செய்து விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்... சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கடந்த மே 26-ஆம் தேதி முதல் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் புதன்கிழமை (ஜூன் 1) 1,414 பேர் விண்ணப்பத்தைப் பெற்றனர். இதுவரை மொத்தம் 20,638 பேர் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர். சுகாதாரத் துறையின் இணையதளம் மூலம் 675 பேர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். 4,264 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு: வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வரும் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை 4,264 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக