ஓசூரில் பெருமழை 20 வருடங்களில் காணாத வெள்ளம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஓசூரில் பெருமழை 20 வருடங்களில் காணாத வெள்ளம்


கடந்த 20 வருடங்களாக காணாத பெரு மழையை ஓசூர் தற்போது நேருக்கு நேர் சந்தித்து வருகிறது. இயற்கையை எதிர்த்து யாராலும் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்துக்கு ஓசூர் மட்டும் விதிவிலக்கா என்ன? கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மழை வெள்ளத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் ஓசூர் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்த பெருவெள்ளத்தில் மூன்று பேர் பலியாகி இருக்கின்றனர். சென்னை மழை கற்று தந்த பாடத்தை அண்டை மாவட்டங்கள் கவனிக்கவில்லை. மாநகரமே அந்தப் பாடத்தை மறந்து மீண்டும் நீர்நிலைகளை ஆக்ரமிக்கும் இயல்பு வாழ்க்கைக்கு வெகு சீக்கிரம் திரும்பி விட்டபோது, மாநிலத்தின் மற்ற பகுதிகள் மட்டும் அதை நினைவில்வைத்து தன் தவறுகளை சரி செய்து கொள்ளுமா என்ன? இதன் விளைவு… இதோ, மழைநீரில் ஓசூர் மிதந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் மழை வெள்ளத்தோடு மல்லுக்கட்டு முடியாமல் மூன்று பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் நேற்று இரவு முதல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஓசூரில் நேற்றிரவு 11:00 மணிக்கு ஆரம்பித்த பெருமழை, அதிகாலை 4:00 மணிக்குதான் மிதமான மழையாக மாறியது. இதனால், ஏராளமான குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பினால், பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதையொட்டி சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஓசூர் தாலுகாவில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மாவட்ட கலெக்டர் கதிரவன் பிறப்பித்துள்ளார். தொடர் மழை காரணமாக 44 அடி உயரம் கொண்ட கெலவரபள்ளி அணையின் நீர் மட்டம் 42 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதனைச் சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் யாரும் தரைப் பாலங்களை கடக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here