தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஓளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் வருகிற ஜூலை 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ச.மோசஸ் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் கிறிஸ்டோபர் வரவேற்றாரப். மாநில பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் வேலை அறிகையை படித்தார். மாநிலப் பொருளாளர் ச.ஜீவானந்தம் வரவு-செலவு அறிக்கையை படித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் ச.மயில் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில முழுவதுமிருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பின்னர் மாநில பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஒளிவுமறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கையால் தாமதமானது. தற்போது தேர்தல் முடிந்து அரசு பதிவியேற்று பின்னரும் கலந்தாய்வு தொடர்பாக ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை கூட இதுவரை பெறாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் இந்த கலந்தாய்வில் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை ஒளிவுமறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வை அரசு உடனடியாக நடத்த வேண்டும். மேலும் தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்தல், பொருளாதாரக் கொள்கைகளை ஆகியவற்றை எதிர்த்து 2016 செப்.2 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மக்கள் நலன் கருதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி முழுமையாக பங்கேற்கும். தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பெற வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால் தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். தற்போது பள்ளி திறந்த ஒரு சில நாட்களிலேயே பிற பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் பரிசோதனைக்கு ஆசிரியர்களை பயன்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். தமிழகஅரசு ஏற்கனவே வழங்கப்பட்ட 6-வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்தும், தற்போது அறிவிக்கப்பட்டுள்லது 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக