அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு- 2016 அரசு பள்ளியே நமது பள்ளி! கல்வி ஒரு சேவையே! வணிகமல்ல! கல்வி வியாபாரத்தை புறக்கணிப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த ஒரு மாத காலமாக விருத்தாசலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதையொட்டி மினிமாரத்தான் ஓட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அனைவரையும் சேர்க்க வலியுறுத்தி விருத்தாசலத்தில் 19-06-2016 ஞாயிறு அன்று காலை 6.45 மணியளவில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மம்மு ஸ்வீட்ஸ் உரிமையாளர் விருத்தகிரி, வழக்கறிஞர்கள் ராஜு, செந்தில்குமார், புஷ்பதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மினி மாரத்தான் ஓட்டம் விருத்தாசலம் சித்தலூர் புறவழிச்சாலையில் காலை 6.45 மணிக்கு தொடங்கி கடலூர் புறவழிச்சாலை, பெரியார்நகர் வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலை அடைந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் ஓடினர். அரசு ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதாரத்துறை வேன், காவல்துறை நண்பர்கள் அனைவரும் உடன் வந்தனர். ஆங்காங்கே தண்ணீர், பிஸ்கட் விநியோகிக்கப்பட்டது. மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, “மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பெற்றோர்கள் பள்ளிகளை கண்காணித்தால் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கும்” என்று உரையாற்றினார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக கோப்பைகளையும், மெடல்களையும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வழங்கினார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பெற்றோர் சங்கத் துணைத் தலைவர் அன்பழகன், செயலர் செந்தாமரைக்கந்தன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தலைவர் செல்வம், செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். மாரத்தான் ஒட்டத்தில் விருத்தாசலம் தலைமை மருத்துவர் சுவாமிநாதன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிறுத்தொண்டநாயனார் கலந்து கொண்டு ஓடியது அனைவரையும் வியக்கவைத்தது.
பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பெரும்பாலானோர் 6 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இவ்வளவு தூரத்தை நிறைவு செய்து அவர்களுடைய தன்னம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக கூறினர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் (CEO) மற்றும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக