கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்திற்காக, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பி.காம் மாணவி ஒருவர். " ஆங்கில மோகத்தின் உச்சகட்ட அவலம் இது. தாய்மொழியில் படித்தால் அவமானம் எனக் கற்பிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" எனக் கவலையோடு பேசுகின்றனர் கல்வியாளர்கள். திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் மாணவி ராஜலட்சுமி. மிகுந்த வறுமைச் சூழலுக்கு இடையில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். முழுக்க தமிழ் வழிக் கல்வியில் படித்தவருக்கு, கல்லூரியின் ஆங்கிலச் சூழல் ஒத்துவரவில்லை. சக மாணவ, மாணவிகளிடையே சரளமான ஆங்கிலத்தில் பேச முடியாமல் வேதனைப்பட்டு வந்திருக்கிறார். நேற்று ராஜலட்சுமியின் தாய் சுசீலா வேலைக்குச் சென்றதும், வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் மாணவி. தற்கொலைக்கான காரணமாக மாணவி குறிப்பிட்டுள்ள ஒற்றைக் காரணம், ' ஆங்கிலத்தில் பேச முடியாததால் அவமானமாக இருக்கிறது' என்பதுதான். " மாணவியின் மரணம் மிகுந்த வேதனையைத் தருகிறது. தாய்மொழியில் படிக்கும் பொறியாளர்கள் இருந்தால்தான், நமது மாநிலத்தை வளர்த்தெடுக்க முயற்சி செய்வார்கள். சொந்த மொழியில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள்தான், நமது மக்களின் நலன் குறித்து சிந்திப்பார்கள். இங்கு உருவாக்கப்படும் மாணவர்களின் நோக்கமெல்லாம் வெளிநாட்டை நோக்கித்தான் இருக்கிறது. வணிகமயமான கல்விச் சூழலில் ஆங்கிலத்தையே உயர்த்திப் பிடிக்கிறார்கள்" என வேதனையோடு பேச தொடங்கினார் திண்டிவனத்தில் தாய்த் தமிழ் பள்ளியை நடத்தி வரும் பேராசிரியர்.பிரபா கல்விமணி. அவர் நம்மிடம், " இந்தி மொழி திணிப்புக்கு எதிராக, ' உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' எனச் சொல்லி உயிர்த் தியாகம் செய்தவர்கள் ஏராளம். அந்தத் தியாகத்தின் பலனாக ஆட்சிக்கு வந்தவர்கள், தாய்மொழியை வளர்த்தெடுப்பதற்கு எந்த அக்கறையையும் காட்டாததின் விளைவைத்தான், மாணவியின் மரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இது முழுக்க முழுக்க நமது கல்விமுறையில் ஏற்பட்ட குளறுபடி. வெளிநாடுகளில் பத்து லட்சம் மக்கள் இருக்கக் கூடிய மாநிலங்களில் உயர்கல்வி படிப்பு முழுவதையும் தங்கள் மொழியிலேயே கற்றுக் கொள்கிறார்கள். அதன்மூலம் எண்ணற்ற கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துகிறார்கள். பத்து கோடி மக்கள் பேசக் கூடிய தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தை நோக்கி ஓட வைக்கிறார்கள். 'நான் தமிழில்தான் படிப்பேன். தேவைப்பட்டால் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வேன்' எனக் கூறும் சமூகத்தை உருவாக்க வேண்டும். கடந்த தி.மு.க ஆட்சியில் பொறியியில் படிப்பில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட மூன்று படிப்புகளை தமிழில் கொண்டு வந்தார்கள். எங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியில் படித்த அகிலா என்ற மாணவி, தாய்மொழியில் பொறியியல் படித்து வருகிறார். சிறந்த மதிப்பெண்களை வாங்கியிருக்கிறார். இந்த மாணவர்களுக்கு தமிழ்வழிப் பொறியியல் படிப்புகளைக் கொடுத்தவர்கள், அதற்கென சரியான புத்தகங்களைக்கூட அச்சிடவில்லை. இலவச தொலைக்காட்சிக்கும் மிக்ஸிக்கும் பணத்தை செலவிடுபவர்கள், தாய்மொழிக் கல்விக்கான புத்தகங்களை அச்சிடக்கூட பணத்தை ஒதுக்குவதில்லை. தற்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதிலும், ' ஐந்தாம் வகுப்பு வரையில் மாநில அரசு விரும்பினால், தாய்மொழியில் கல்வி கற்க வைக்கலாம். ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்விதான்' என்கின்றனர். இது மிகவும் வேதனையானது. மல்டி நேஷனல் கம்பெனிகளுக்குத் தேவையான ஆட்களைத் தயார் செய்வதற்கான திட்டம் இது. நமது நாட்டில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் முறையே தவறானது. ஒரு குழந்தைக்கு மொழியை அறிமுகப்படுத்தும்போது, முதலில் கேட்பது, பிறகு பேசுவது, அடுத்து எழுதுவது என மூன்று படிநிலைகளில்தான் ஒரு மொழி புரிய வைக்கப்படுகிறது. இங்கு எடுத்த உடனேயே, ஆங்கிலத்தில் எழுதுவதைத்தான் முதலில் செய்கிறார்கள். அடிப்படையே தவறாக இருக்கிறது. ஆங்கிலத்தில் படித்தால் பெருமை என நினைக்கும் மெத்தப் படித்த மேதாவிகள் இருப்பதால்தான், தற்கொலையை நோக்கி மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். அரசின் பார்வையில் மாற்றம் வர வேண்டும்" என ஆதங்கப்பட்டார் பிரபா கல்விமணி.
Post Top Ad
Home
Unlabelled
ஆங்கிலத்தில் பேச முடியாததால் தீக்குளித்த பி.காம் மாணவி
ஆங்கிலத்தில் பேச முடியாததால் தீக்குளித்த பி.காம் மாணவி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக