ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது. இந்தாண்டில் கலந்தாய்வு விதிமுறையில் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. இதன்படி 1.6.2016க்கு முன் பணியேற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டு கலந்தாய்வு ஆகஸ்டில் தான் நடந்தது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் 1.6.2016க்கு பின் தான் பணியேற்றனர். இந்த விதியால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது: புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் நடக்கவுள்ள கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. 1.6.2015ல் கலந்தாய்வு நடந்திருந்தால் இந்த விதிமுறை சரியாக இருக்கும். ஆனால் ஆகஸ்டில் தான் கலந்தாய்வு நடந்தது.மேலும் சென்றாண்டு தலைமையாசிரியர்களாக பதிவு உயர்வு பெற்றவர்களுக்கும் கலந்தாய்வில் எவ்வித தளர்வும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு இதுவும் ஏமாற்றமான விஷயம் தான். சம்பந்தப்பட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு வந்து அனைவரும் பங்கேற்க கல்வித்துறை வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் இக்கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் மற்றும் ஆசிரியர் பணியிடங்களையும் வெளியிட்டு கலந்தாய்வில் சேர்க்கப்பட வேண்டும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக