பார்ப்பானியத்திற்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போர்க்கோலம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பார்ப்பானியத்திற்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போர்க்கோலம்!

மாட்டுக்கறிக்கு தடை, பசு புனிதம் என தனது பார்ப்பன இந்துமத பாசிச நடவடிக்கைகளை மக்களிடம் திணித்து வந்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மத வெறி அமைப்புகளுக்கு குஜராத் தலித்துகள் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திவ்ய பாஸ்கர் என்ற குஜராத் பத்திரிக்கையில் வெளியான செய்தி கடந்த வாரத்தில் குஜராத் மாநிலத்தின் உனா பகுதியில் மாட்டுத்தோலை உரித்ததற்காக சிவசேனா மற்றும் பசு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பார்ப்பன இந்துமத வெறி அமைப்பினரால் தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டனர். பின்னர் ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். இளைஞர்கள் மாட்டை கொன்றார்களா இல்லையா என்பதை தான் போலீசாரும் விசாரித்து வந்தனர். இது பற்றிய செய்தியை வினவில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இக்காட்டுமிராண்டிதனத்தை கண்டித்து குஜராத் மாநிலத்தில் தலித்துக்கள் ஆரம்பித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த திங்களன்று சுரேந்தர் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செத்த மாடுகளால் நிரம்பி வழிந்தது. சுமார் 15 லாரிகளில் செத்த மாடுகளை அள்ளிவந்து ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டினர் தலித் மக்கள். இப்போராட்டத்தில் 1500-க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதே போல கோன்டல் துணை ஆட்சியர் அலுவலகம் மாட்டு எலும்புகளால் நிரம்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வண்டிகளில் செத்த மாடுகளை போட்டு செல்கிறார்கள் தலித் மக்கள். மாநிலம் முழுவதும் இதை பின்பற்றவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெருக்களில் செத்த கால்நடைகளை போட்டு போராடும்படி அழைப்பு விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தாங்கள் நடத்தும் போராட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு மாட்டுத் தலையோடும் மக்கள் வருகிறார்கள். செத்த மாட்டின் தலையை தனியே எடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு கொண்டு வந்திருந்ததை புகைப்படத்தோடு முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது திவ்ய பாஸ்கர் என்கிற குஜராத்தி பத்திரிகை. ஆர்.எஸ்.எஸ் சொல்லிவரும் பார்ப்பன இந்து மத ஆச்சாரங்களின் மீது காறி உழிழ்ந்துள்ளார்கள் குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள். ”நாங்கள் இனி செத்த விலங்குகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபடமாட்டோம். அரசு இவ்வேலைக்கு சிவசேனாவின் சிவசைனிக்குகளையும், பசு பாதுகாப்பாளர்களையும் நியமித்து செத்த மாட்டை அப்புறப்படுத்தட்டும்” என்கிறார்கள் போராட்டக்காரர்கள். குஜராத்தில் தலித்துக்கள் அரசு அலுவலகங்களில் செத்த மாடுகளால் நிரப்பினர் முன்னதாக தலித் குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு மறுநாள் உனா பகுதியில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வண்னம் ராஜ்கோட் மாவட்டத்தில் விசமருந்தும் தற்கொலைப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது மாட்டின் உயிரைவிட தலித்துகளின் உயிர் கீழானதா என ஆத்திரத்தில் கல்வீச்சு மற்று பேருந்துக்கு தீவைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. 19-ம் தேதி பேசான் பகுதியில் நடந்த விசமருந்தும் போராட்டத்தில் ஹேமந்த் சொலான்கி என்பவர் இறந்தார்.

அம்ரிலி பகுதியில் நடந்த போராட்டத்தின் போது போலீசுடன் நடந்த மோதலில் போலீஸ் ஒருவர் உயிரிழந்தார். மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் போராட்டம் பரவி வருகிறது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட கிரி ரத்தோட் என்ற தலித் உரிமை ஆர்வலர் கூறுகையில், “உனா பகுதியில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குஜராத்தில் நிகழ்ந்துவரும் தலித்துக்கள் மீதான எண்ணற்ற தாக்குதலில் ஒரு பகுதிதான். குஜராத்தில் தலித்துக்கள் மிக மோசமான நிலையில் வசிக்கிறார்கள். அரசு அவர்களைக் காப்பாற்ற தவறிவிட்டது” என்கிறார். தலித்துக்கள் மீதான தாக்குதல் வாடிக்கையானது தான் என்றாலும் இந்த சம்பவம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மற்றொரு ஆர்வலர் பார்மர். இந்த போராட்டம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார் மற்றொரு மனித உரிமை செயற்பாட்டாளர் ஜிங்னேஷ் மெவானி. “கடந்த 2004 முதல் தலித்கள் மீதான வன்முறை குஜராத்தில் அதிகமாக வளர்ந்துவருகிறது. இக்குற்றங்களில் தண்டிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோ குறைந்துவருகிறது. ஆக எங்குமே நீதி கிடைக்காத போது ஆத்திரம் அதிமாகத்தான் செய்யும்” என்கிறார் இவர்.

இந்து மத வெறியர்களால் தாக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் தலித் இளைஞர்கள் நடைபெற்று வரும் போராட்டத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். “எங்களை தாக்கியவர்கள் தண்டிக்கபடவேண்டும்” என்கிறார்கள் அவ்விளைஞர்கள். தலித் மக்கள் இந்துமத வெறியர்களை எதிர்த்து போராடிவரும் போது ராம்விலாஸ் பஸ்வான், அதுவாலே, மாஞ்சி போன்ற தலித் பிழைப்புவாத தலைவர்களோ ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பார்ப்பன பாசிச கும்பலிடம் நத்தி பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது தலித்திய அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது. தற்போது மக்கள் அரசு, நீதிமன்றம்,கட்சிகள், ஊடகங்கள் யாரையும் நம்பவில்லை. தங்கள் மீது இழைக்கப்பட்ட வன்முறையை ஒழிக்க அவர்களே போராட்ட ஆயுதத்தை ஏந்தியிருக்கிறார்கள். தலித் மக்களின் மீதான வன்முறைக் கொடுமையை இந்த அமைப்புக்குள்ளேயே தீர்த்து விடலாம் என்ற மனப்பால் குடித்த ‘தலித்தியம்’ மற்றும் ஓட்டுக் கட்சி தலித் இயக்கங்களின் தோல்வியையும் இது காட்டுகிறது.

2002- கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஈடுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் தற்போது இஞ்சி தின்ற குரங்காய் முழிக்கின்றன. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தொடர்பாக முஸ்லீம்களும், தலித் மக்களும் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தலித் மக்கள் திருப்பித் தாக்கி வருகின்றனர். அதுவும் இந்துத்துவத்தின் கோட்டையான குஜராத்திலேயே, மோடியை உற்பத்தி செய்து அனுப்பிய காவி வெறி மண்ணிலேயே இந்த போராட்டம் நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. எந்த மாட்டைப் புனிதம் என்று பசப்பினார்களோ அதே மாட்டிறைச்சி இன்று குஜராத் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அலையலையாகக் கொட்டப்படுகிறது. விலங்குகள் அனைத்துமே சிறந்த மரியாதைக்கு உரியவைதான்.தமிழகத்தில் பசு இறைச்சி உண்ணாத தாழ்தப்பட்டோரில் ஒரு பிரிவினரான தேவேந்திரகுல மக்கள்  இருக்கத்தான் செய்கின்றனர்.அவர்கள் யாரையும் நிர்பந்திப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த போராட்டம் பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டமாக இந்தியா முழுவதும் மாறும் போது இந்து மதவெறியர்களுக்கான கல்லறை நிச்சயம் கட்டப்படும். போராடும் தலித் மக்களுக்கு தோள் கொடுப்போம்! பார்ப்பனியத்தை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் கொட்டுவோம். – ரவி வினவு.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here