*கல்விக் கொள்கைகள் : ஓர் பார்வை*
📚*பகுதி : 3*📚
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*மூலம்:*
_சமூக நீதியை மறுக்கும் புதிய கல்விக் கொள்கை!_
_பிரின்ஸ் கஜேந்திர பாபு @ இந்து நாளிதழ்_
_*நம் கல்வி... நம் உரிமை! - _
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*பாடத்தை முடிவுசெய்வது யார்?*
புதிய கல்விக் கொள்கை மூலம் பத்தாம் வகுப்பில் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ என இரண்டு தேர்வு முறைகளைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது மத்திய அரசு. பல்வேறு விதமான சமூக, பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்து, பல தடைகளைக் கடந்து இடைநிலைக்கு வரும் மாணவர்களை உயர் கல்வி தொடர விடாமல் செய்யும் சூழ்ச்சி இது.
எந்த மாணவர் உயர் கல்வியில் கணிதம், ஆங்கிலம் தொடர்ந்து படிக்கப்போவதில்லையோ, அவர் பிரிவு ‘ஆ’வைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
மற்றவர்கள் பிரிவு ‘அ’ வைத் தேர்வுசெய்வார்கள் என்கிறது புதிய கல்விக் கொள்கை ஆவணம்.
அதாவது, பிரிவு ‘ஆ’வைத் தேர்வு செய்பவர்கள் உயர் கல்வியில் கணிதம், அறிவியல் படிக்க இயலாது. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 14 வயதுதான் ஆகியிருக்கும். இந்த வயதில் உயர் கல்வியில் என்ன படிக்கப்போகிறோம் என்பதை அவர்களால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
மாணவர்களை 10-ம் வகுப்பிலேயே கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை உயர் கல்வியில் படிக்கத் தகுதியற்றவர்களாக்கும் கல்விக் கொள்கை முற்போக்கானதா? பிற்போக்கானதா?
இவ்வளவு வடிகட்டலுக்குப் பிறகு, மிச்சம் மீதி இருக்கும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் திறன் அறியும் தேர்வில் பங்கேற்று, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குத் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை என்கிறது இந்த ஆவணம்.
*ஒரே பாடத்திட்டம்*
தேசிய அளவில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம் என்கிறது இந்த ஆவணம். இது சாத்தியமற்றது.
கணிதத்திலோ, அறிவியலிலோ குறிப்பிட்ட கோட்பாட்டை, ஒரு மாணவர் குறிப்பிட்ட வகுப்பில் அறிந்திருக்க வேண்டும் என்று அறிவித்துவிட்டால், அந்தக் கோட்பாட்டை மாணவர்களுக்கு எவ்வகையில் வழங்கலாம் என்பதை மாநில அளவில் வகுக்கப்படும் பாடத்திட்டம் தீர்மானிக்கும். மண் சார்ந்து, மக்கள் சார்ந்துதான் கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் உருப்பெறுகின்றன; வளர்கின்றன. ஒரே மாதிரி யான பாடத்திட்டத்தை இந்தியா போன்ற பன்முகப் பண்பாட்டை, பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் புகுத்த முடியாது; புகுத்தவும் கூடாது.
அந்தந்த மாநிலத்தின் ஆசிரியர்கள்தான் அந்தந்த மாநிலத்தில் பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். சம்பந்தமே இல்லாமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து சிலர் தயாரிக்கும் பாடத்திட்டத்தை அனைத்து ஆசிரியர்களும் நடத்த வேண்டும் என்பது ஆசிரியர்களைப் பாடத்திட்ட உருவாக்கத்திலிருந்து விலக்கி வைப்பதாகும்.
மாணவர்களின் சமூக, பொருளாதாரப் பின்னணியையும், அவர்களின் புரிதல் திறனையும் அறிந்தவர்களே உள்ளூர் அளவில் பாடத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் எனும் அக்கறையான குரல்கள் எழுந்திருக்கும் காலத்தில், மாநில அளவில்கூடப் பாடத்திட்டம் தயாரிக்கப்படாது; தேசிய அளவில்தான் அது இருக்கும் என்பது நிச்சயம் மாணவர்களின் நலன் சார்ந்தது அல்ல.
அப்படியே தேசிய அளவில் கல்விக் கொள்கை உருவானாலும், மொழி, கல்வி ஆகியவற்றில் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கக் கூடாது. பாடத்திட்டம் மாநில அரசால் உருவாக்கப்பட வேண்டும்.
அருகமைப் பள்ளி அமைப்பில், வயதுக்கேற்ற பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழி வழியில், பொதுப்பள்ளி முறைமையை உருவாக்கி, அரசின் செலவிலும் பொறுப்பிலும், 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் மேல்நிலைப் பள்ளிக் கல்விவரை அடிப்படை உரிமையாக்கி வழங்குவது அரசின் கடமை.
கற்றல் தாய் மொழியில்தான் நிகழும் என்பதால், பள்ளிக் கல்வியைத் தாய் மொழிவழியிலேயே தர வேண்டும் என சுப்பிரமணியன் குழு அறிக்கை பரிந்துரைத்திருப்பதை மறந்துவிடக் கூடாது.
கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்க பொதுப் பள்ளி முறைமைதான் ஏற்றது என்பது உலக அனுபவம். இந்தியாவில் உருவான அனைத்துக் குழுக்களும் இதையே பரிந்துரைத்திருக்கின்றன. எனவே, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, தவறான கொள்கை முன்மொழிவுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்களாட்சியின் உண்மையான அடையாளம் அதுதான்!
*<<பார்வைக்கு உட்படுத்தல் தொடரும் > >*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக