புதுடில்லி:அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும், 'டவுன்ஹால்' என்ற நிகழ்ச்சியைப் போல், முதல்முறையாக பிரதமர் மோடியும், டில்லியில் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அசத்தினார். அப்போது, பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், ''பசு பாதுகாப்பு என்ற பெயரில், பலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்றவர்களை, மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஆவேசப்பட்டார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, மக்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், 'எனது அரசு' என்ற பொருளில், 'மைகவ்.இன்' (mygov.in) என்ற இணையதளம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதன், இரண்டாம் ஆண்டு விழா, டில்லி, இந்திரா விளையாட்டு அரங்க வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
அமெரிக்கா போன்ற நாடுகளில், 'டவுன்ஹால்' என்ற பெயரில், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சியில், அதிபர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இதே பாணியில், இந்த நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நம் நாட்டில், இது போன்ற நிகழ்ச்சி நடப்பது, இதுவே முதல்முறை.
கலந்துரையாடல்:மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 'மைகவ்.இன்' இணையதளத்தில், ஆர்வத்துடன் பங்கேற்று, அரசு திட்டங்கள் குறித்து, சிறப்பான பரிந்துரைகளை அளித்த, 2,000 பேர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி, இதில் பங்கேற்று, அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து, பிரதமர் பேசியதாவது:
ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை, பொது மக்கள் குறைகளை தீர்ப்பது தான். குடிமக்களின் பங்கு, ஓட்டு போடுவதுடன் முடிந்து விடாது; அவ்வாறு செயல்பட்டால், ஜனநாயகம் முழுமை பெறாது. அடுத்த தேர்தலில், கூடுதல் ஓட்டுகளுடன் வெற்றி பெறுவதையே, ஆட்சியாளர்கள் குறிக்கோளாகக் கருதுகின்ற னர். அதை சார்ந்தே, அவர்களின் கொள்கைகள் அமைந்து விடுகின்றன. இதனால், நிர்வாகம் பாதிக்கப்படுகிறது.
அரசு செயல்படுத்தும் திட்டங்கள், உரியவர்
களை சென்றடைய வேண்டும். நல்ல நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லை எனில், மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படாது.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், உங்களை போன்றவர்கள், நல்ல நிர்வாகத்திற்கு
மிகவும் அவசியம். பதவியில் இருப்பவர்கள், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்தாக வேண்டும்.
கிராமங்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தான், 300 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'ஸ்மார்ட்சிட்டி பிளஸ்' என்ற பெயரில் நவீன வசதிகள், தரமான சுகாதாரம் வழங்கப்பட உள்ளன. தேசத்திற்காக, காதியை, மக்கள் தங்கள் கொள்கையாக ஏற்க வேண்டும். தங்கள் உடையில், 5 சதவீத அளவிற்கு கதராடைகளை பயன்படுத்தினால், நெசவாளர்களின் வாழ்க்கை உயரும்.
நமக்கு வெறும், மருத்துவ காப்பீடு மட்டும் தேவையல்ல; நமக்கு தேவை, சரியான மருத்துவத்திற்கான உறுதியளிப்பு தான். உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையால் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், நம் நாடு வளர்ந்து வருகிறது.
பசுக்களின் மீது அன்பு, பக்தி வைத்திருப்பது வேறு; பசு சேவை என்பது வேறு. பசு பாதுகாப்பு என்ற பெயரில் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்; அவர்கள் குற்றவாளிகள். இது போன்றவர்களை, மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறைச்சிக்காக கொல்லப்படும் பசுக்களை விடவும், பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு உயிரிழக்கும் பசுக்கள் அதிகம். பசுக்களுக்காக தொண்டாற்றுபவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை தெருக்களில் வீசி எறிவதை தடுத்து நிறுத்தட்டும்;
அது, மிகப்பெரிய சேவையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, 'மைகவ்' போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பிரதமர் மோடி பரிசு வழங்கினார்.
மவுனம் கலைப்பு:
சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி, பலர் தாக்கப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் பசுவின் தோலை உரித்ததாக, தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பொது இடத்தில், கட்டி வைத்து, அடிக்கப்பட்டனர்.
பசு பாதுகாப்பு படையினர் இது போன்ற வன் முறையை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவங்கள், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர், நேற்று தன் கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் முயற்சி: அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், 'டவுன்ஹால்' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில், முக்கிய தலைவர்களுடன், குறிப்பிட்ட அழைப்பாளர்கள் கலந்துரையாடுவர். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், அந்த< தலைவர்களின் உரையும் இடம்பெறும்.உயர் பதவியில் இருப்பவர்கள், நேரடியாக பங்கேற்று, பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு, அங்கேயே, வெளிப்படையாக பதில் அளிக்கும் இந்த நிகழ்ச்சி, மேலை நாடுகளில் வழக்கமாக நடத்தப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, இது போன்ற நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருபவர். இதை போன்றே, இந்தியாவில் முதல்முறையாக, 'டவுன்ஹால்' நிகழ்ச்சி, நேற்று நடத்தப் பட்டது.
பிரதமர் மோடி, இதில் பங்கேற்று, சுகாதாரம், வெளியுறவு, பொருளா தாரம், சீரிய நிர்வாகம், வெளிப்படையான செயல்பாடு, மக்கள் பங்களிப்பு, காதியின் பயன், பசு பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் என, பல விதமான தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மிக சாதுர்யமாகவும், உணர்ச்சிகரமாகவும் பதிலளித்தார்.
நாள் முழுவதும் நடந்த இந்நிகழ்ச்சியில், நான்கு அமர்வுகள் இருந்தன. கடைசியாக, பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு முன், குழு விவாதம், பல தலைப்புகளில் அமைச்சர்களின் பதில்கள் என வித்தியாசமாக இந்த நிகழ்ச்சி அமைந்து இருந்தது.
'மொபைல் ஆப்' :பிரதமர் அலுவலகத்தின் புதிய, 'மொபைல் ஆப்' இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. 'இந்த ஆப் மூலம், பொதுமக்கள், மொபைல் போன் வழியாக, எந்த இடத்திலிருந்தும் எளிமையாக தொடர்பு கொள்ள முடியும்.
கடந்த மார்ச்சில், 'மைகவ்' போட்டி நடத்தப்பட்டபோது, அதில் வெற்றி பெற்ற இன்ஜினியரிங் மாணவர்கள் ஆறு பேர், இந்த மொபைல் ஆப்பை வடிவமைத்திருந்தனர்.
சாதனை பயணம்:
நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: மைகவ்.இன் இணையதளத்தில், தற்போது, 35 லட்சம் பேர் பதிவு செய்து, உறுப்பினர்களாக உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக