சென்னை கவுன்சிலர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் குவித்த சொத்துக்கள் பற்றி புலனாய்வு செய்ததில் நமக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாம் அதிர்ச்சிரகம்.ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... 2011-ல் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், பெரும்பாலானவற்றில் அ.தி.மு.க-வினர் வெற்றிபெற்றனர். கவுன்சிலர்கள் பதவியேற்று ஓராண்டுக்குள் அவர்கள் மீது வரலாறு காணாத அளவுக்குப் புகார்கள் வந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார் முதல்வர் ஜெயலலிதா. கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து, ஒவ்வொருவரைப் பற்றி புகார் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார் ஜெயலலிதா. ‘‘பிராத்தல் பன்றவங்கக்கிட்ட எல்லாம் போய், மாமூல் வாங்கியிருக்கியே...’’ என்று கண்கள் சிவக்க ஜெயலலிதா கடுகடுத்ததைக் கண்டு வெலவெலத்துப் போனார் பெண் கவுன்சிலர் ஒருவர். முதல்வரின் கண்டிப்புக்குப்பிறகு கமிஷன், மாமூல், கட்டிங் என எல்லாவற்றையும் கவுன்சிலர்கள் நிறுத்திவிட்டார்களா என விசாரித்தோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் தலைசுற்ற வைத்தன.
ஆண்டுக்கு ஒரு கோடி!
“டூவீலரில் போனவர்கள் எல்லாம் இப்போது ஃபார்ச்சூனர், இனோவா, ஸ்கார்ப்பியோ போன்ற ஆடம்பர கார்களில் பவனி வருகிறார்கள். சிங்கிள் பெட்ரூம் வீட்டில் இருந்தவர்களுக்கு இப்போது சென்னையில் பல பங்களாக்கள். கவுன்சிலர்களுக்கு சம்பளம் எல்லாம் கிடையாது. மாநகராட்சிக் கூட்டம் நடக்கும்போது ஒருநாளைக்கு 1,000 ரூபாய் கொடுப்பார்கள். அவ்வளவுதான். அவர்கள் வேறு பல வழிகளில் பணத்தைக் குவிக்கிறார்கள். மாநகராட்சி வார்டுகளில் விடப்படும் டெண்டர்கள், வார்டு நிதியில் நடைபெறும் பணிகள், ரியல் எஸ்டேட் போன்றவை மூலமாக கவுன்சிலர்கள் பணத்தை அள்ளுகிறார்கள். ஒரு கவுன்சிலருக்கு ஓர் ஆண்டுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அப்படியென்றால், 5 ஆண்டுகளுக்கு 5 கோடி ரூபாய் வரை கிடைத்திருக்கிறது. புறநகர் பகுதிகளில் உள்ள கவுன்சிலர்கள் கடந்த 5 ஆண்டுகளில் 7-10 கோடி ரூபாய் வரை வருமானம் பார்த்திருக்கிறார்கள்” என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர். முதல்வரின் கண்டிப்புக்குப் பிறகுதான், ஆட்டம் ஜாஸ்தி ஆனது என்கிறார்கள்.
எழுதப்படாத விதி!
“கவுன்சிலர்களுக்கு ஆண்டுதோறும் வார்டு நல நிதியாக 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் பேருந்து நிழற்குடை, பள்ளிக்கட்டடங்கள் உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டும். இந்தப் பணிகளுக்கான டெண்டரில் 10 சதவிகித கமிஷனை கவுன்சிலர்கள் கறாராக வசூலித்து விடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ஆண்டுதோறும் 3 லட்சம் ரூபாய் கிடைத்து விடுகிறது.
கவுன்சிலர்களின் வார்டுகளுக்குள் செய்யப்படும் பணிகளுக்கு டெண்டர் எடுத்து நாங்கள் செய்யும் பணிகளுக்கான தொகையில் 2 சதவிகிதத்தை கவுன்சிலருக்கு கமிஷனாகத் தர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சென்னையில் 200 வார்டுகளிலும் தலா ஒரு கோடிக்கும் குறையாத ஏதாவது ஒரு பணி மாதம்தோறும் நடைபெற்று வருகிறது. மாதம்தோறும் குறைந்தபட்சம் இரண்டு சதவிகிதம் ஒரு கவுன்சிலருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கிறது. அவர்கள் கேட்ட கமிஷனைக் கொடுக்காவிட்டால் ஆட்களை வைத்து வேலைகளுக்கு இடையூறு செய்வார்கள். சாலைகள் தரமாக இல்லை என்று சொல்வார்கள்” என்றார் ஒரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்.
ரியல் எஸ்டேட் காமதேனு!
இதுதவிர ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் கவுன்சிலர்களுக்கு வருமானம் அளிக்கும் காமதேனுக்களாக இருக்கின்றனர் என்கிறார்கள். இதுகுறித்து ஒரு ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் பேசினோம். “சி.எம்.டி.ஏ உள்ளிட்ட அமைப்புகளிடம் முறைப்படி அனுமதி வாங்கி ஃப்ளாட்கள் கட்டுகிறோம். ஒரு மனையில் 4 ஃப்ளாட்கள் கட்டுகிறோம் என்றால், ஒரு ஃப்ளாட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சம் ரூபாய் கவுன்சிலருக்குக் கொடுக்க வேண்டும். சில ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ-விடம் 4 ஃப்ளாட்கள் கட்ட அனுமதி வாங்குவார்கள். ஆனால், மொட்டை மாடியில் ஒரு ஃப்ளாட், கார் பார்க் இடத்தில் ஒரு ஃப்ளாட் எனக் கூடுதலாக 2 ஃப்ளாட்களைக் கட்டுவார்கள். இப்படிக் கட்டும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் களிடம் ஒரு ஃப்ளாட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கவுன்சிலர்கள் கறந்துவிடுவார்கள். புதிதாக ஒரு குடியிருப்பு கட்டுப்படுகிறது என்றாலே கவுன்சிலருக்குத் தகவல் போய்விடும். உடனே சி.எம்.டி.ஏ-வில் விசாரிப்பார்கள். அனுமதி வாங்கியது 4 ஃப்ளாட்களுக்கு, கட்டுவதோ 6 ஃப்ளாட்கள் என்று ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் பேரம் பேசுவார்கள். பணம் கொடுக்காவிட்டால், ஆட்களை அனுப்பித் தகராறு செய்வார்கள். ஃப்ளாட்களை விற்க முடியாத நிலை ஏற்படும். எனவே, பெரும்பாலான ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கவுன்சிலர்களுக்கு கமிஷனை கரெக்டாக கொடுத்துவிடுவார்கள்” என்றார் அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர்.
“தனியார் தொலைபேசி நிறுவனங்கள் சார்பில் கேபிள் பதிப்பதற்காக அடிக்கடி சாலையைத் தோண்டுகின்றனர். சாலையைத் தோண்டுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி வாங்கிவிடுவார்கள். எனினும், கிலோ மீட்டருக்கு இவ்வளவு என்று கவுன்சிலர்களையும் கவனிக்க வேண்டும். ஒரு சாலை வெட்டுக்கு 10 ஆயிரம் ரூபாயாவது கவுன்சிலர்கள் வாங்கிவிடுவார்கள். சாலை வெட்டுவதற்கு அனுமதி தரும் மாநகராட்சி அதிகாரிகளே, சில நேரம் கமிஷனை வசூலித்து கவுன்சிலர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள்” என்கிறார், மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
மாமூல் பல ரகம்!
“நடைபாதைக் கடைகள், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்களிடமும் மாமூல் வாங்குவார்கள். குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்புகளை கவுன்சிலர்கள் இல்லாமல் சாதாரண மக்கள் பெற்றுவிட முடியாது. கவுன்சிலர்கள் பரிந்துரைக்குப் பின்னர்தான் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வசதி வாய்ப்புகளுக்குத் தகுந்தாற்போல ஓர் இணைப்புக்குக் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை கவுன்சிலர்கள் வாங்குகின்றனர். வணிக நிறுவனங்களுக்கான இணைப்புகள் என்றால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேலே கவுன்சிலர்கள் கறந்துவிடுவார்கள்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கவுன்சிலர்கள் தரப்பிலோ, “தங்கள் வார்டில் நடக்கும் கட்சிக் கூட்டங்களுக்கு மாதம் ஒரு முறை சில லட்சங்களை செலவழிக்க வேண்டி இருக்கிறது. கட்சிக்காரர்களுக்கு அவர்கள் அவ்வப்போது கேட்கும் தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது” என நியாயப்படுத்துகிறார்கள்.
எப்படித் தடுக்கலாம்?
சட்டப் பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். “அரசியல் கட்சிகளில் எம்.எல்.ஏ., எம்.பி பதவிகளுக்குப் போட்டியிடுபவர்களைப்போல கவுன்சிலர்கள் பதவிகளுக்குப் போட்டியிடுபவர்களும் தங்கள் அரசியல் கட்சிகளிடம் பல லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்துத்தான் சீட் வாங்குகின்றனர். பதவிக்கு வந்ததும் முதலீட்டைத் திரும்ப எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பணம் வாங்குகின்றனர். கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்படும் வார்டு நிதி மற்றும் வார்டு நிதி செலவிடப்படும் விதம் குறித்து வெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்வதற்கு இணையதளத்தில் வசதி செய்யப்பட வேண்டும்” என்றார்.
இங்கு லஞ்சமும், ஊழலும் மேல்மட்டத்தில் இருந்து கட்டப்படுகிறது. எனவே, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள் கவுன்சிலர்கள் மட்டுமல்ல...
-விகடன்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக