பலுசிஸ்தான் விவகாரத்தில் உலக நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு கண்டனமும் இந்தியாவுக்கு ஆதரவும் கிடைத்து வருகிறது. பாகிஸ்தான் நடத்திவரும் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசிய மோடிக்கு, ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் ‘பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்கள் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு முழு உரிமையுள்ளது’ எனவும் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கானைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதன்முறையாக இந்தியப் பிரதமர் மோடி பலுசிஸ்தான் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பலுசிஸ்தான் விவகாரம் குறித்து பேசியதால்தான் அந்த மக்கள்மீது பாகிஸ்தான் செலுத்தும் அடக்குமுறைகள் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் ராணுவ உதவிபற்றி அமெரிக்கா ஆதரவு அளித்தால் அதை வரவேற்கிறோம். ஆதரவு அளிக்கவில்லை என்றால் யாருடைய அனுமதிக்காகவும் இந்தியா காத்திருக்கத் தேவையில்லை. இந்தியா தனது பிராந்திய நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறது’ என்றார். மேலும் கடந்த காலங்களில் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவு பற்றியும் குற்றம்சாட்டினார். இதற்குமுன் இந்தியா வந்த வங்கதேச அமைச்சர் ஹசானுல் ஹயு இனுவும் பலுசிஸ்தான் குறித்த மோடியின் பேச்சுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக