:எதிர்க்கட்சிகள் ஒன்றும் ஊடகங்களைக் கவர்வது அத்தனை எளிதல்ல. ஆனால், தன் பல்வேறு எதிர்ப்பு வடிவங்களால் ஊடகங்களைக் கவர்வதில் இன்னும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை இன்று போட்டி சட்டமன்றம் நடத்தி காட்டியிருக்கிறார்கள் திமுக எம்எல்ஏ-க்கள்.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் பின்னர் ஸ்டாலின் உட்பட திமுக-வின் 80 உறுப்பினர்கள் ஏழு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் நியாயம் கேட்டு, போராடி வரும் திமுக உறுப்பினர்கள் 80 பேரும் நேற்று சட்டப்பேரவையின் நான்காம் எண் வாயில்கேட்டின் முன்பாக அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த, சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினர்.
சஸ்பெண்ட் உறுப்பினர்கள் 80 பேரும் அறிவாலயத்தில் கூடி நேற்றே போட்டி சட்டமன்றம் நடத்துவது என முடிவு எடுத்தனர். அதன்படி இன்று காலை ஆளுக்கொரு சேர்களை எடுத்துவர வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். மைக் செட்கள், சேர்கள், கையில் பிடித்து ஆட்டும் மணி உள்ளிட்ட பொருட்களோடு காலை 10.15 மணிக்கு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சி.எம் செல் அமைந்திருக்கும் இடத்தை தேர்வு செய்து அமர்ந்தனர். அந்தப் பகுதிதான் மரங்கள் அடர்ந்து ஓரளவு நிழலாக இருக்கும் என்பதால் சட்டமன்றத்தை அங்கு நடத்தலாம் என முடிவு செய்தனர். சபாநாயகராக துரைமுருகனும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஏ.வ.வேலுவும், நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொன்முடியும் இருக்க, மீதமிருந்த எம்எல்ஏ-க்கள் ஆளும் கட்சி போலவும் எதிர்க்கட்சி போலவும் பிரிந்து நின்றனர்.
திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் எழுந்து, “எங்கள் தொகுதியில் புறவழிச்சாலை தேவை” என்று சொன்னதும்.
கையை நீட்டியபடியே பேசத் துவங்கிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு “இது உடனடியாக அம்மாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். முதல்வர் அதை கவனிப்பார். முதல்வர் பரிசீலிப்பார். முதல்வர் முடிவெடுப்பார்” என்று சொன்னதும், டேபிளை தட்ட வேண்டிய எம்எல்ஏ-க்களுக்கு தட்ட டேபிள் இல்லாத காரணத்தால் சிலர் சேர்களைத் தட்டினார்கள், சிலர் கைதட்டினார்கள். திட்டக்குடி எம்எல்ஏ கணேசன் பேச எழுந்தபோது அவரை பேசவிடாமல் தடுத்த சபாநாயகரையும் மீறி அவர், “திட்டக்குடியில் இருக்கும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்” என்று சொல்ல… நல்வாழ்வுத்துறை அமைச்சர் பொன்முடி,
“இதை உடனடியாக செய்ய முடியாது. முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வோம். முதல்வருக்குச் சொல்வோம். முதல்வர் சிந்தித்து கலந்து பேசி முடிவெடுப்பார்” என்றதும் எம்எல்ஏ-க்கள் கைகளைத் தட்டினார்கள்.
இதை சபாநாயகர் தனபால் போல மிமிக்ரி செய்து பேசிய துரைமுருகனின் பாடி லேங்வேஜுக்கு செம அப்ளாஸ்... அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் பேசத் தொடங்க பெல் அடித்து அவரை துரைமுருகன் அமரச் சொல்ல… “நான் இன்னும் பேசவே இல்லையே” என்று சொல்ல, “போதும்… போதும் உக்காருங்க” என்று தனபால் டோனில் சொன்னதும் ஏகப்பட்ட கிளாப்ஸ் பறந்தது. சட்டமன்றக் கூட்டம் விறுவிறுப்பாக நடந்தபோது இடையில் புகுந்த காவலர்கள் சபையைக் கலைக்க, கொண்டு வந்த சேர்களை கார்களில் ஏற்றியபடி வரிசையாக கலைந்து சென்றனர் திமுக எம்எல்ஏ-க்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் திமுக நடத்திய போட்டி சட்டப்பேரவை கூட்டம் அத்தனை தொலைக்காட்சிகளிலும் லைவ் டெலிகாஸ்ட் ஆனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக